பிரதமர் மோடியின் சாதனைகளை கொண்டாடும் பாஜக! 'பெண்களின் பொற்காலம் இது தான்'...! - நயினார் நாகேந்திரன் புகழாரம்...!
BJP celebrates PM Modi achievements This golden age women Nainar Nagendran praises
பெண்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றத்திற்கு புதிய பரிமாணங்களை உருவாக்கிய ஆட்சியாக பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம் திகழ்ந்து வருவதாகவும், பெண்களின் வாழ்வாதாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது,"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்ற கவிமணியின் வரிகளுக்கு உயிரூட்டும் வகையில், பெண்மையின் மகத்துவத்தையும் ஆற்றலையும் உலக அரங்கில் உயர்த்திப் பேசிய தலைவராக பிரதமர் நரேந்திர மோடி விளங்கி வருகிறார்.

கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் அவரது ஆட்சியில், பெண்களின் முன்னேற்றம் என்பது வெறும் அரசியல் முழக்கமாக இல்லாமல், கோடிக்கணக்கான குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடி மாற்றத்தை உருவாக்கிய மக்கள் நலக் கொள்கையாக உருவெடுத்துள்ளது.
கிராமப்புற பெண்கள் சந்தித்து வந்த அத்தியாவசிய சிரமங்களை குறைக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சமையலறைகளில் புகைமூட்டத்தால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளும், குடிநீர் வசதிகளை மக்களின் வாசற்படிக்கே கொண்டு சேர்க்கும் திட்டங்களும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளன.
அதேபோல், வங்கிச் சேவைகளை அனைவருக்கும் எளிதில் கிடைக்கச் செய்து, பெண்கள் பொருளாதார தன்னம்பிக்கை பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பல லட்சம் பெண்கள் குடும்பத்தின் சார்புநிலையிலிருந்து வெளியேறி, சுயமாக வருமானம் ஈட்டும் நிலையையும் சமூக அங்கீகாரத்தையும் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, தொழில் முனைவோர் துறை, நிர்வாகம் மற்றும் பாதுகாப்புப் படைகள் என அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களது திறமையை நிரூபித்து புதிய சாதனைப் பாதைகளை உருவாக்கி வருகின்றனர். மகாகவி பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்களின் எழுச்சியை இந்தியா இன்று நனவாகக் கண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வளர்ந்த இந்தியா என்ற உயரிய தேசிய இலக்கை நோக்கி நாடு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், பெண்களின் முன்னேற்றத்திற்காக கடந்த 12 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களிடையே எடுத்துரைத்து, அதன் பயன்களை மேலும் பரவலாக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
BJP celebrates PM Modi achievements This golden age women Nainar Nagendran praises