செஸ் போர்டில் முதலமைச்சர் விஜய்...! எதிரே நின்ற பிரக்ஞானந்தா! ஆட்டம் எப்படி இருந்தது...? - மனம் திறந்த கிராண்ட்மாஸ்டர்...!
Chief Minister Vijay chess board Praggnanandha standing opposite How game Open minded Grandmaster
உலக செஸ் அரங்கில் இந்தியாவின் பெருமையை மீண்டும் உயர்த்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, நார்வே செஸ் தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி நாடு முழுவதும் பாராட்டுகளை குவித்து வருகிறார். இந்த வெற்றிக்குப் பிறகு இன்று சென்னை திரும்பிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்.

சமீபத்தில் நிறைவடைந்த நார்வே செஸ் தொடரில் உலகின் முன்னணி செஸ் நட்சத்திரங்களை பின்னுக்குத் தள்ளிய பிரக்ஞானந்தா, அபார ஆட்டத்தால் சாம்பியன் பட்டத்தை வென்று புதிய சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பொறித்தார். இதன்மூலம் நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்திய வீரர் என்ற அரிய பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
வெறும் 20 வயதிலேயே உலக செஸ் அரங்கில் தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ள பிரக்ஞானந்தா, இறுதிச் சுற்றில் ஜெர்மனியைச் சேர்ந்த வின்சென்ட் கீமரை வீழ்த்தி மகுடத்தை உறுதி செய்தார்.சாம்பியன் பட்டத்துடன் சென்னை வந்த பிரக்ஞானந்தாவுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பெற்றார்.அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, “நார்வே செஸ் தொடரில் நான் பெற்ற வெற்றிக்காக முதலமைச்சர் விஜய் சார் நேரில் அழைத்து பாராட்டினார். அவரை சந்தித்து வாழ்த்து பெற்றது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்தது.
அவருடன் செஸ் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த அனுபவம் எனக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. தொடரின் நிறைவுக்குப் பிறகு உடனடியாக என்னை அழைத்து பாராட்டியதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.விஜய் சார் செஸ் விளையாட்டில் நல்ல தேர்ச்சி பெற்றவராக இருந்தார்.
நான் வெற்றி பெற்றிருந்தாலும், அவர் இவ்வளவு திறமையாக விளையாடுவார் என்று நினைக்கவில்லை. அவருடன் விளையாடியது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
மேலும், எனது சாதனையை பாராட்டும் வகையில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையையும் வழங்கினார். இது எனக்கு மேலும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்துள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
English Summary
Chief Minister Vijay chess board Praggnanandha standing opposite How game Open minded Grandmaster