ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுக்கு 'செக்'! - 1,250 கிலோ அரிசியுடன் சிக்கிய மினி வேன்! - அதிகாரிகள் அதிரடி வேட்டை!
Check ration rice smuggling gang Mini van caught 1250 kg rice Officials launch massive hunt
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மினி வேனில் பதுக்கி எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 1,250 கிலோ ரேஷன் அரிசியை காவலர்கள் அதிரடியாக பறிமுதல் செய்து, தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.

கோவில்பட்டி வேலாயுதபுரம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் மறைமுகமாக வெளியேற்றப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில், தனிப்படை பிரிவு உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான காவலர்கள் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்ட காவலர்கள், அதில் 25 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் மொத்தம் 1,250 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அரிசி மூட்டைகளும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக வேலாயுதபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த காமராஜ் (65) என்பவரை காவலர்கள் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் மினி வேன் ஆகியவை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
மேலும், இந்த ரேஷன் அரிசி எந்த பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டது? இதன் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார்? என்ற கோணங்களில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Check ration rice smuggling gang Mini van caught 1250 kg rice Officials launch massive hunt