வாக்கு எண்ணிக்கை; தமிழகம் முழுவதும் போலீசார் 02-ஆம் தேதி முதல் விடுப்பு எடுக்க தடை: டிஜிபி உத்தரவு..!
Ban on Police Taking Leave Ahead of Vote Counting
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 04-ஆம் தேதி நடைபெற்று, அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக மருத்துவ விடுப்பு மற்றும் மகப்பேறு விடுப்பில் இருப்பவர்கள் தவிர மற்ற அனைவரும் வரும் 02-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை விடுப்பு எடுக்க கூடாது என்று காவல்துறைக்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தலில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்களை மாநிலம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்களில் காவல்துறை மற்றும் துணை ராணுவம் பாதுகாப்புடன் ஸ்ட்ராங் ரூம்பில் வைத்து சீல் வைக்கப்பட்டு,04 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் மத்திய ஆயுத காவல் படையினரும் (துணை ராணுவ), 02-வது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், 03-வது அடுக்கில் சென்னை பெருநகர ஆயுதப்படை காவலர்கள், 04-வது அடுக்கில் சென்னை பெருநகர சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ள காவலர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்துடன் இணைந்து தமிழ்நாடு காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக செய்து வருகின்றனர். அதன்படி, தமிழ்நாடு காவல்துறையில் டிஜிபி தலைமையில் 18 கூடுதல் டிஜிபிக்கள், 44 ஐஜிக்கள், 37 டிஐஜிக்கள், 173 எஸ்பிக்கள், 09 ஆயுதப்படை எஸ்பிக்கள், 09 தமிழ்நாடு சிறப்பு காவல்படை அதிகாரிகள்(தளவாய்), 208 கூடுதல் எஸ்பிக்கள், 980 டிஎஸ்பிக்கள், 16 தமிழ்நாடு சிறப்பு காவல்படை அதிகாரிகள் (துணை தளவாய்), 54 தமிழ்நாடு சிறப்பு காவல்படை (உதவி தளவாய்), 3,396 இன்ஸ்பெக்டர்கள், 11,393 எஸ்ஐக்கள், முதல் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை காவலர்கள் என 1 லட்சத்து 17 ஆயிரத்து 609 போலீசார் என மொத்தம் தமிழ்நாடு காவல்துறையில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 961 பேர் தற்போது பணியாற்றி வருகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை நாளாக மே 04 அன்று, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் வகையில் தமிழக காவல்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், கூடுதல் டிஜிபிக்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள் மாநகர கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். தேர்தல் வாக்கு எண்ணும் பணியின் போது எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், குற்ற பின்னணியில் உள்ள நபர்களை வாக்கு எண்ணிக்கை அன்று தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஏ பிளஸ் மற்றும் ஏ, பி கேட்டகிரி ரவுடிகள் அனைவரையும் அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை அந்தந்த மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் மாநகர கமிஷனர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், வாக்கு எண்ணிக்கை அன்று மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு அளிக்கும் வகையில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அவசர சுற்றறிக்கை ஒன்று அனைத்து மாநகர கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்கள், மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.
அதில், ''தேர்தல் பாதுகாப்பு பணி காரணமாக தற்போது மகப்பேறு விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்பில் இருப்பவர்களை தவிர, மற்ற அனைத்து வகையான போலீசாரும் வரும் 02-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை யாரும் விடுப்பு எடுக்க கூடாது. அப்படி அவசர காவல விடுப்பு தேவை என்றால் சம்பந்தப்பட்ட விபரங்களை அந்தந்த மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் மாநகர கமிஷனர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று விடுப்பு பெற்று கொள்ளலாம். தேவையின்றி யாரேனும் விடுப்பு எடுத்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக உயர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Ban on Police Taking Leave Ahead of Vote Counting