பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து...! ஒருவர் பலியாகியதால் உரிமம் ரத்து செய்யப்பட்டு மேலாளர் கைது...!
Another explosion cracker factory One person died license revoked and manager arrested
விருதுநகரில் சிவகாசியடுத்த திருத்தங்கல்லை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான 'இந்துஸ்தான் பட்டாசு தொழிற்சாலை' சாத்தூர் அருகேயுள்ள கீழதாயில் பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இது 10 ஏக்கர் பரப்பளவிலான நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.மேலும், 50-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று பட்டாசு தொழிற்சாலை 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயங்கியது. அங்கு முழுக்க முழுக்க பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில்,ஆலையில் தொழிலாளர்கள் வந்து வேலையை தொடங்கினர். அதற்கு முன்னதாக மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உராய்வு காரணமாக திடீரென்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து,அருகிலிருந்த அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவியதுடன், அதிக சத்தத்துடன் வெடித்து சிதறிய பட்டாசுகளால் 16 அறைகள் இடிந்து தரைமட்டமானது. இதில், விபத்து நடந்த பட்டாசு ஆலையிலிருந்து பல மீட்டர் உயரத்திற்கு புகை கிளம்பியது. அதே போல வெடிச்சத்தம் 10 கி.மீ தூரத்திற்கு கேட்டுள்ளது.இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பட்டாசு ஆலைக்கு திரண்டு வந்தனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவலளித்தனர்.
அதன்பேரில் சிவகாசி, தாயில்பட்டி, சாத்தூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அருகில் மீட்பு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இந்த விபத்து நடந்த அறைகளுக்கு அருகே பலத்த காயங்களுடன் போராடிய ராஜசேகர், ராஜபாண்டி, கண்ணன், கமலேஷ், ராஜேஸ் ஆகிய 5 பேரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதையடுத்து ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் இடிபாடுகளை நீக்கி பார்த்தபோது அங்கு பனையடிப்பட்டி பகுதியை சேர்ந்த பாலகுருசாமி என்பவர் சிதறிய நிலையில் சடலமாக கிடந்தார்.
அடுத்தடுத்த அறைகளிலும் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. அவை முழுமையாக அகற்றப்பட்ட பின்னரே பலியானவர்களின் எண்ணிக்கை தெரியவரும்.இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் மற்றும் போலீசார் அங்கு விசாரணை நடத்தி வருகிறார்கள்.மருந்து கலக்கும் பணியின் போது விதிமீறல் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பட்டாசு ஆலை போர்மென் லோகநாதனை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.கடந்த 1-ந்தேதி சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் கமல்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியானார்கள். அந்த சோகம் அடங்குவதற்குள் சாத்தூர் அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Another explosion cracker factory One person died license revoked and manager arrested