'திமுக அரசின் அடக்குமுறைக்கும் கைது நடவடிக்கைகளுக்கு என்றும் அஞ்சோம்'; கைதுக்கு பின் அண்ணாமலை சூளுரை..!
Annamalai arrested in Tiruppur
திருப்பூர் மாநகரில் சேரும் குப்பையை இடுவாய், சின்னகாளிபாளையம் கிராமத்தில் கொட்டப்படுவதால், ஐந்து கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளது. அத்துடன், குப்பைகளை கட்டுப்பாடுகளுடன் கொட்ட, நீதிமன்றம் அனுமதியும் வழங்கியது.
இங்கு குப்பையை பிரித்து கொட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அப்பகுதி மக்கள் அங்கு குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பான, மேல்முறையீடு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில், குப்பைக் கொட்டக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி, நேற்று முன்தினம் குப்பை கொட்ட சென்ற லாரிகளை கிராம மக்கள் தடுக்க முயன்றுள்ளனர். அப்போது போலீசார் - பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றுள்ளனர். இதன் போது ஏற்பட்ட சலசலப்பில் பொது மக்கள் தரப்பில் மண்டை, கை, கால் உடைப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 10 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், குப்பை கொட்டும் விவகாரத்துக்கு தீர்வு காணக்கோரி பொது மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜவினர் கலந்து கொண்டனர். அவர்கள் அங்குள்ள குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்த அண்ணாமலை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.
இதனைத்தொடர்ந்து, அந்த இடத்தில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், போராட்டம் நடந்த இடம் கலவரம் நடந்த இடமாக மாறியது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த கைது சம்பவம் தொடர்பில் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
''திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்தில், பொதுமக்கள் விருப்பத்திற்கு எதிராக குப்பைக்கிடங்கு அமைக்கும் பணியை நிறுத்தக் கோரி, பொதுமக்களோடு இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த, திமுக அரசு அனுமதி மறுத்ததோடு மட்டுமல்லாமல், தமிழக பாஜக திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் திரு. ஸ்ரீநிவாசன் மற்றும் நான் உட்பட பாஜக தொண்டர்களைக் கைது செய்திருக்கிறது காவல்துறை.
நாட்டிலேயே, தூய்மையான பெருநகரங்களில், சென்னை, மதுரை, கோவை மற்றும் சிறு நகரங்களில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்டவை கடைசி இடங்களில் இருக்கின்றன. கமிஷன் வாங்குவதற்காக மட்டுமே, திருப்பூர் மாநகரத்தையே குப்பைக்கிடங்காக்கி வைத்திருக்கிறது திருப்பூர் மாநகராட்சி. திருப்பூர் மாநகர திமுக மேயர், இதற்காக மட்டுமே பதவியில் இருக்கிறார்.
பொதுமக்கள் எத்தனை போராட்டம் நடத்தினாலும், திருப்பூருக்கான நிரந்தரத் தீர்வு, தேர்தலில் மக்கள் அளிக்கப் போகும் வாக்குகள்தான். வரும் தேர்தலில், இந்த மக்கள் விரோத திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
ஜனநாயக முறைப்படி, இடுவாய் கிராம பொதுமக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்க அனுமதி தர மறுத்து, எங்களைக் கைது செய்து அடக்குமுறையைக் கையாளும் திமுக அரசும், காவல்துறையும், நாளை முதல் வேறு வேறு வடிவங்களில் பொதுமக்களின் போராட்டத்தைச் சந்திப்பார்கள் என்பதைக் கூறிக் கொள்கிறேன்.
திமுக அரசின் ஒடுக்குமுறைக்கும் கைது நடவடிக்கைகளுக்கும் என்றும் அஞ்சோம். இடுவாய் மக்களின் குரலாக எங்கள் குரல் என்றும் ஒலிக்கும்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Annamalai arrested in Tiruppur