அக்னி நட்சத்திரம் 2026: அனல் பறக்கும் கத்திரி வெயிலைச் சமாளிக்க அரசு மருத்துவர்களின் முக்கிய ஆலோசனைகள்!
Agni Nakshatram 2026 Expert Health Tips to Beat the Scorching Summer Heat in Tamil Nadu
தமிழகத்தில் கோடை காலத்தின் உச்சக்கட்டமான 'அக்னி நட்சத்திரம்' அல்லது கத்திரி வெயில் வரும் மே 4-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி வரை நீடிக்க உள்ளது. குறிப்பாக அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த அதீத வெப்பத்திலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ள அரசு மருத்துவர்கள் வழங்கியுள்ள முக்கிய ஆலோசனைகள் இதோ:
உடை மற்றும் பாதுகாப்பு:
வெயில் காலத்தில் வெளிர் நிறப் பருத்தி ஆடைகளை அணிவது காற்றோட்டத்திற்கு வழிவகுக்கும். பெண்கள் ஜீன்ஸ் மற்றும் லெக்கின்ஸ் போன்ற உடலை இறுக்கும் ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது. வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்வதுடன், சூரிய ஒளி நேரடியாகப் படும் முகம் மற்றும் கை பகுதிகளில் 'சன் ஸ்கிரீன்' லோஷன் தடவிக் கொள்ளலாம். மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
நீர்ச்சத்து மற்றும் உணவு:
தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், அவ்வப்போது தண்ணீர் குடிப்பது அவசியம்.
ஆண்கள்: குறைந்தது 4 லிட்டர் தண்ணீர்.
பெண்கள்: குறைந்தது 3 லிட்டர் தண்ணீர்.
வெயிலில் பணியாற்றுவோர்: 5 லிட்டருக்கும் அதிகமாகத் தண்ணீர் பருக வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை அதிகமுள்ள குளிர்பானங்களைத் தவிர்த்து, இயற்கை பானங்களான இளநீர், நுங்கு, மோர் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த பழங்களைச் சாப்பிட வேண்டும்.
ஏசி அறையில் இருப்பவர்களுக்குத் தாகம் எடுக்காது என்பதால், அவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து வெயிலிலேயே இருக்க நேரிட்டால் 'ஹீட் ஸ்ட்ரோக்' (Heat Stroke) எனப்படும் வெப்பத்தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
உடலில் நீர்ச்சத்து குறையும்போது சிறுநீரகச் செயலிழப்பு போன்ற கடுமையான மருத்துவச் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே, வெளியில் சென்று வீடு திரும்பும் குழந்தைகள் கை, கால்களை நன்கு கழுவுவதை உறுதி செய்ய வேண்டும்.
English Summary
Agni Nakshatram 2026 Expert Health Tips to Beat the Scorching Summer Heat in Tamil Nadu