பாங்காக்கிலிருந்து 'ஹைட்ரோபோனிக் கஞ்சா' கடத்தல்; மும்பையில் கைது செய்யப்பட்டுள்ள கேரளா மாடல் அழகி..!
Mrs Kerala model arrested for smuggling hydroponic cannabis from Bangkok
'மிஸஸ் கேரளா 2025' போட்டியில் வெற்றி பெற்றவர், 28 வயதான மாடல் அழகி ஹர்ஷா சன்னி. இவர் தற்போது 'ஹைட்ரோபோனிக் கஞ்சா' கடத்தலில் ஈடுபட்டு விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
ஏர் இந்தியா விமானம் மூலம் பாங்காக்கிலிருந்து மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு மாடல் அழகி ஹர்ஷா சன்னி வந்துள்ளார். அப்போது அவரது நடவடிக்கையைக் கவனித்த விமானப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்பொழுது சன்னியின் டிராலி பையை சோதனை நடத்திய போது அதில், "பச்சை நிறப் பொருள்" நிரப்பப்பட்ட 12 வெற்றிட-சீல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுள்ளனர்.

அதன் பின்னர் அதனை பறிமுதல் செய்து, போதைப்பொருள் மற்றும் மனநலப் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் சட்டத்தின் கீழ் பரிசோதனைக் கருவியைக் கொண்டு அந்த இடத்திலேயே வேதியியல் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அப்பொருள் உயர்தர 'ஹைட்ரோபோனிக் கஞ்சா' என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களைக் கடத்தியதற்காக NDPS சட்டத்தின் கீழ் ஹர்ஷா சன்னியைச் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

சுமார் 11 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட இந்த 'ஹைட்ரோபோனிக் கஞ்சா'வின் மதிப்பு கிட்டத்தட்ட 11 கோடியே 82 லட்ச ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஹர்ஷா சன்னியை ஃபோர்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹர்ஷா சன்னிக்கு பாங்காக்கில் போதைப் பொருள் சப்ளை செய்தது யார்..? அதை மும்பையில் வாங்க இருந்தது யார்..? எவ்வளவு கோடி ரூபாய் பணம் இவர்களுக்குள் கைமாறியது..? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
English Summary
Mrs Kerala model arrested for smuggling hydroponic cannabis from Bangkok