ஐயோ! பாதயாத்திரை சென்ற பெண்கள் கூட்டத்திற்கு நடுவே வாகனத்தை விட்டதால் விபத்து! 2 பேர் பலி
Accident after leaving vehicle middle group women going padayatra 2 people died
கடலோர கிராமமான திருப்பாலைக்குடி என்பது ராமநாதபுரம் தொண்டி அருகே கிழக்கு கடற்கரைச்சாலையிலுள்ளது. இந்த கிராம வழியாக சிதம்பரம், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை பகுதியிலிருந்து ராமேசுவரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி,கேரள மாநிலம் களியாக்காவிளை போன்ற ஆன்மீக, சுற்றுலா பகுதிகளுக்கு தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் சுற்றுலா வாகனங்களும் வருகின்றன.

மேலும், தொண்டி கடல் பகுதியில் பிடிக்கும் கடல் உணவுப் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களும் இவ்வழியாகச் செல்கின்றன.அதுபோன்று, தொண்டி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற தலமான வல்மீக நாதர் சமேத பாகம்பிரியாள் அம்மன் கோவிலுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடைபயணமாக வருகிறார்கள்.
அவ்வகையில் ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த 18 பெண்கள் ஒரு குழுவாக வந்து கொண்டிருந்தனர். அவர்கள் திருப்பாலைக்குடிக்கும் உப்பூருக்கும் இடையே கிழக்கு கடற்கரை சாலையில் வந்தசமயம், அதிகாலை 4.30 மணிக்கு அடையாளம் தெரியாத வாகனம் கூட்டத்தில் நுழைந்தது.
இந்த சம்பவத்தில் முனியசாமி மனைவி சாந்தி (வயது 50), பாலமுருகன் மனைவி புவனேஸ்வரி (40) ஆகிய 2 பெண் பக்தர்களும் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.யாரும் எதிர்பார்க்காத கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் என்ன நடந்தது என்று சக பக்தர்கள் எண்ணியபோது, விபத்தை ஏற்படுத்திய அந்த வாகனம் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது.
மேலும் இந்த விபத்தில் நாகஜோதி மற்றும் சிலர் காயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருப்பாலைக்குடி காவல் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.மேலும்,ஆடி அமாவாசையை முன்னிட்டு பாதயாத்திரையாக சென்ற 2 பெண் பக்தர்கள் விபத்தில் பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Accident after leaving vehicle middle group women going padayatra 2 people died