டார்ச்சர் செய்யும் அமைச்சர்கள் குறித்து உயர்மட்ட குழு விசாரணை வேண்டும்..திமுக மகளிரணி வலியுறுத்தல்!  - Seithipunal
Seithipunal


பெண் எம்எல்ஏவை டார்ச்சர் செய்யும் அமைச்சர்கள் குறித்து உயர்மட்ட குழு விசாரணை வேண்டும் என திமுக மகளிரணி வலியுறுத்தியுள்ளது ! 

புதுச்சேரி மாநில திமுக.மாநில மகளிர் அணி அமைப்பாளர்ந. காயத்திரி ஶ்ரீகாந்த் கூறியதாவது: சனநாயக இந்தியாவில், பெண்களின் அரசியல் உரிமைகள் முக்கிய அம்சமாக இருக்கிறது. பெண்கள் அரசியலில் பங்கேற்கும்போது எதிர்கொள்ளும் சவால்கள் இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை. அரசியல் களத்தில் பெண்களுக்கு சமஉரிமைகளும், பாதுகாப்பான பணிச்சூழலும் உறுதி செய்யப்பட வேண்டிய தேவை இருக்கிறது. இந்தியாவிலுள்ள ஆணாதிக்க மனோபாவம், சாதி மற்றும் பாலின பாகுபாடுகள், அரசியல் சதி, பண பலம் போன்றவை பெண் அரசியல்வாதிகளை இழிவுபடுத்தவும், அவர்களது வளர்ச்சியை தடுக்கவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்காவின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், பெண்களுக்கு எதிரான இத்தகைய பாகுபாடுகளை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.

புதுச்சேரி பெண் சட்டமன்ற உறுப்பனரும் முன்னாள் அமைச்சருமான சந்திர பிரியங்கா நேற்று முன் தினம் புதுச்சேரியை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இரண்டு அமைச்சர்களால் மிகுந்த டார்ச்சரை அனுபவிப்பதாக குறிப்பிட்டுருந்தார். மேலும், தனக்கு பாதுகாப்பில்லை எனவும், தனது தனிப்பிட்ட நடவடிக்கைகளை அரசின் அதிகாரங்களை கையில் வைத்துக் கொண்டு வேவு பார்க்கிறார்கள் என்றும், அவரது ஆதரவாளர்களின் மீது வழக்குகள் பதியப்பட்டு அலைகழிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டு, எனது அப்பா ஸ்தானத்தில் உள்ள முதல்வர் ஒருவருக்காக மட்டுமே பொறுத்துக் கொண்டு, நான் பெயர் சொல்லாமல் இருக்கிறேன். எனக்கு டார்ச்சர் கொடுக்கப்படுவதை நான் அறிந்திருக்கிறேன் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவே இந்த வீடியோவை வெளியிடுகிறேன் என திண்ணமாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
 
காரைக்கால், நெடுங்காடு சட்டமன்ற தாெகுதியின் உறுப்பினர் சந்திர பிரியங்கா, ஒரு சாதாரண பெண்மணி கிடையாது. அவர் புதுச்சேரியின் முன்னாள் அமைச்சர் மறைந்த சந்திரகாசுவின் மகள். நாற்பது ஆண்டுகள் கழித்து, அதிக பெண் வாக்காளர்களை கொண்ட புதுச்சேரியில்,  பெண் அமைச்சராக பதவி ஏற்றார். பின்னர், பதவி ஏற்ற இரண்டு ஆண்டுகளிலேயே, தான் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், பெண் என்பதாலும், சாதிய ரீதியாகவும், பாலின ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறி தனது அமைச்சர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார் சந்திரபிரியங்கா.

பெண்களுக்கான பிரதிநிதித்துவமே இல்லாத அமைச்சரவையில் இருந்து கொண்டு, பெண் சட்டமன்ற உறுப்பினருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் அவரை அச்சுறுத்தும் அமைச்சர்கள் யார் என்பதை அறிய உயர்மட்டக்குழு ஒன்றை சபாநாயகர் அறிவிக்க வேண்டும். சந்திர பிரியங்காவின் அரசியல் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தொடர்ந்து அவரை இழிவுப்படுத்தி அவதூறு பரப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். தனக்கு நேரும் இந்த அநியாயங்களை புதுச்சேரி காவல்துறையில் உள்ள உயர் அதிகாரியிடம் புகார் அளிக்கச் சென்ற போது, சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரயங்காவிற்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில், தனக்கு இந்த அமைச்சர்களால் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்று பிரியங்கா கேட்டதற்க, அவரது சொத்துக்களை எல்லாம் யார் பெயருக்காவது மாற்றி வைத்துவிட வேண்டும் என்றும், அண்மையில் நடந்த விமான விபத்தை குறிப்பிட்டு இன்று இருப்பவர்களுக்கு நாளை என்ன நடக்கும் என்று தெரியாது என ஏளனமாகவும், அதிகார வர்கத்திற்கு துணை நின்று அவரது புகாரை ஏற்கவும் மறுதலித்துள்ளார். 

சந்திரபிரியங்காவின் இந்த குற்றச்சாட்டுகளை அப்படியே கடந்துவிட முடியாது. மக்களுக்காக, ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என அரசியலுக்கு வரும் பெண்களுக்கு, ஆணாதிக்க அமைச்சர்களால் அறிவிக்கப்படும் நேரடியாக எச்சரிக்கையாக இந்த நிகழ்வு உள்ளது. தனது கட்டுப்பாட்டில் சட்டமன்ற உறுப்பினரை அடக்கி வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்ட அமைச்சர்கள் யார்? சந்திரபிரியங்காவின் புகாரை ஏற்க மறுத்த உயர் அதிகாரி யார்? என தேசிய மகளிர் ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையமும் இவ்விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். மேலும், பெண் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரியங்காவிற்கு முழு பாதுகாப்பினை உறுதி செய்து பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை புதுச்சேரியில் பாதுகாக்க முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என புதுச்சேரி மாநில திமுக.மாநில மகளிர் அணி அமைப்பாளர்ந. காயத்திரி ஶ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A high-level committee inquiry is required regarding the ministers involved in the corruption DMK womens wing demands


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->