கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 2,415 கனஅடி தண்ணீர் திறப்பு; 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
A flood warning has been issued for 3 districts as 2415 cubic feet of water per second is being released from the Krishnagiri Dam
கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 2,415 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 03 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால் கெலவரப்பள்ளி அணையில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இன்று (18ஆ-ம் தேதி) காலை 08 மணி நேரப்படி, விநாடிக்கு 1516 கனஅடியாக இருந்த நீர்வரத்து மதியம் 02 மணியளவில் 1679 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 49.50 அடியாக உள்ளதால், நீர்வரத்து முழுவதும் 03 மணல் போக்கி சிறிய மதகுகள் வழியாக விநாடிக்கு 2415 கனஅடி திறக்கப்பட்டுள்ளது.
திறக்கப்பட்ட தண்ணீர் ஆற்றில் சீறி பாய்ந்து அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியபடி சென்றதால், கிருஷ்ணகிரி அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை அலுவலர்கள் கூறியதாவது;
கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 2415 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆறு கடந்து செல்லும், பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சௌட்டஹள்ளி, தளிஅள்ளி உள்ளிட்ட 08 ஊராட்சிகளுக்கும், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை வரையில் 03 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றங்கரையோர பொதுமக்கள் ஆறு மற்றும் நீர்நிலைகளை கடக்கவோ, கால்நடைகளை ஆற்று பகுதிகளுக்கு கொண்டு செல்லவோ கூடாது என்று கூறியுள்ளனர்.
அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை, பாரூர் பெரிய ஏரி உள்ளிட்ட 06 இடங்களில் மணல் மூட்டைகள் தயார் நிலையிலும், கிருஷ்ணகிரி அணையில் மட்டும் 02 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையிலும் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
A flood warning has been issued for 3 districts as 2415 cubic feet of water per second is being released from the Krishnagiri Dam