திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விரக்தி; திமுக அரசை கண்டித்து தீக்குளித்த முருக பக்தர் உயிரிழப்பு; அண்ணாமலை இரங்கல்..! - Seithipunal
Seithipunal


திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கப்படாததை கண்டித்து மதுரையில் முருக பக்தர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்துக்கள், முருக பக்தர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அத்துடன், இந்த உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்தும் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை நரிமேடு, மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் பூர்ண சந்திரன் என்பவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார். தீவிர முருக பக்தரான இவர், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாத தமிழக அரசை கண்டித்து, மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள ஈ.வெ.ரா., சிலை முன் தீக்குளித்துக்கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றாத காரணத்தால் வேதனை அடைந்து தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம், முருக பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இரங்கல் தெரிவித்து தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

''சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்த திமுக அரசைக் கண்டித்து, மதுரை மாநகர் நரிமேடு பகுதியை சேர்ந்த முருக பக்தர், பூர்ண சந்திரன், தீக்குளித்து உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இது போன்ற வருந்தத்தக்க முடிவை, பூர்ண சந்திரன் எடுத்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. ஒவ்வொருவரும், அவர்களது குடும்பத்தினருக்கு முக்கியம். இது போன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று அனைவரிடமும் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.

பூர்ண சந்திரன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருமாறு, மதுரை பாஜ சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன். சகோதரர் பூர்ண சந்திரன் ஆன்மா, முருகன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.'' என்று அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A devotee of Lord Murugan who self immolated in Thiruparankundram to protest against the DMK government regarding the lamp lighting issue has died


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->