அட கடவுளே!முதியோர் இல்லத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதில் மேலும் 3 பேர் பலி...!
3 more people die after eating spoiled food nursing home
தென்காசி சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் நகர பஞ்சாயத்து பகுதியில் முதியோர் இல்லம் ஒன்று 'அன்னை நல்வாழ்வு டிரஸ்ட்' என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இங்கு உடல் நலமில்லாத முதியவர்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் என மொத்தம் 59 பேர் உள்ளனர்.

இந்த முதியவர்களுக்கு, நேற்று முன்தினம் மதியம் அசைவ உணவு போடப்பட்டது. அதை உண்ட பலருக்கும் திடீரென்று வாந்தி, பேதி ஏற்பட்ட நிலையில்,அவர்களில் செங்கோட்டையைச் சேர்ந்த அம்பிகா (40), செங்கோட்டையைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (வயது 42), சொக்கம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி முருகம்மாள் (60)ஆகிய 3 பேர் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில்,நேற்று காலையில் கோவில்பட்டி செல்வராஜ் (70),சுகுமார் (72), கோமதி (70), சாந்தி (60), மதுரை விஜயா (66), மும்தாஜ் (52), கடையநல்லூர் மீனாட்சி சுந்தரம் (64), பேச்சியம்மாள் (48), தனலட்சுமி (70) ஆகியோருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.மேலும், அவர்களும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி சங்கர்கணேஷ், முருகம்மாள், அம்பிகா ஆகிய 3 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து முதியோர் இல்லத்திற்கு தென்காசி மாவட்ட காவல் சூப்பிரண்டு அரவிந்த்,உணவு பாதுகாப்பு அதிகாரி புஷ்பராஜ், உதவி கலெக்டர் லாவண்யா,இன்ஸ்பெக்டர் கவிதா, மாவட்ட சுகாதார துறை அதிகாரி கோவிந்தன், துணைகாவல் சூப்பிரண்டு பாஸ்கர் பாபு, தென்காசி தாசில்தார் மணிகண்டன், மண்டல துணை தாசில்தார் சண்முகநாதன் உள்பட அரசு அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில் முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, குடிநீர் போன்றவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். சமையல் அறையிலுள்ள உணவு தயாரிக்க வைக்கப்பட்டிருந்த பொருட்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வுக்கு பின் அதிகாரிகள் தெரிவிக்கையில்,"பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த இல்லத்தில் சம்பவத்தன்று அசைவ உணவு பரிமாறப்பட்டுள்ளது. அந்த அசைவ உணவின் மாதிரிகள், குடிநீரும் ஆய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம்" என்று தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவத்தையடுத்து அந்த இல்லத்திலிருந்த மற்ற 48 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அருகிலுள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து அந்த இல்லத்திற்கு உதவி கலெக்டர் லாவண்யா முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பழனிநாடார் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்து சாம்பவர்வடகரை காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனலட்சுமி என்ற மூதாட்டி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனால் உணவு ஒவ்வாமையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
3 more people die after eating spoiled food nursing home