13 கோடி வாக்காளர்கள் நீக்கம்! டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாகக் சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்த 'கரப்பான் பூச்சி ஜனதா' கட்சியினர் கைது!
13 crore voters removed Cockroach Janata Party members arrested protesting Chennai support Delhi protest
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை காவலர்கள் கைது செய்தனர்.நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கையின்போது பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே இந்தப் பணிகள் நடைபெறுவதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் கருத்துகளைக் கணக்கில் கொள்ளாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டதற்குப் பின்னணியில் ஆளுங்கட்சிக்கு ஆதரவான நடவடிக்கைகள் இருப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் காந்தி ஜெயந்தியன்று ஆம் ஆத்மி கட்சி மற்றும் இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதேபோல், மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவிலும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் அண்மையில் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து, கடந்த 3-ந்தேதி அகில இந்திய மாணவர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தச் சூழலில், வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைக்கு எதிராகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இன்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், இந்தப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.போராட்டத்தின்போது அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் டெல்லி காவல்துறையினர் உள்ளிட்ட சுமார் 25 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னையின் பெசன்ட் நகர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு முன்கூட்டியே அனுமதி பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைந்து செல்லுமாறு காவலர்கள் அறிவுறுத்தினர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தைக் கைவிடச் செய்ய முயன்றனர்.
இருப்பினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.காவலர்களின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள், தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். சாலையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். அப்போது, ‘நீங்கள் எங்களைத் தேர்ந்தெடுக்கக் கூடாது சார்; நாங்கள்தான் உங்களைத் தேர்ந்தெடுக்கிறோம்’, ‘13 கோடி வாக்காளர்கள் நீக்கம்’, ‘அமைப்பு சரியாக இல்லை’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தியபடி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவலர்கள் கைது செய்தனர். அவர்களைத் தூக்கிச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். இதற்கிடையே, அப்பகுதியில் கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
English Summary
13 crore voters removed Cockroach Janata Party members arrested protesting Chennai support Delhi protest