கண்ணாடிகளை உடைத்து மாணவர்கள் மீட்பு...! ஆரணி அருகே விவசாய நிலத்தில் பாய்ந்த பள்ளிப் பேருந்து...! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை ஆரணி அருகே இன்று காலை மாணவர்களுடன் சென்ற தனியார் பள்ளிப் பேருந்து சாலையை விட்டு விலகி விவசாய நிலத்திற்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் உதவியாளராகப் பணியாற்றியவர் உயிரிழந்தார். பேருந்தில் இருந்த மாணவர்கள் அனைவரும் எவ்வித காயமுமின்றி மீட்கப்பட்டனர்.

தனியார் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து இன்று காலை வழக்கம்போல் மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஆரணி நோக்கிப் பயணித்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் இருந்த பள்ளத்தைக் கடந்து அருகிலுள்ள விவசாய நிலத்திற்குள் பாய்ந்தது.

அங்கு தலைகீழாகக் கவிழ்ந்ததால் பேருந்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.பேருந்து கவிழ்ந்ததும் உள்ளே இருந்த மாணவர்கள் அச்சத்தில் கூச்சலிட்டனர். அவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள் மற்றும் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக உதவிக்கு வந்தனர்.

விபத்தில் சிக்கிய மாணவர்களை வெளியேற்றுவதற்காகப் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து பேருந்துக்குள் இருந்த மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியே கொண்டு வரப்பட்டனர். அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்ட நிலையில், பேருந்தில் உதவியாளராகப் பணியாற்றியவர் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட காவலர்கள், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.உயிரிழந்தவரின் பெயர் உள்ளிட்ட விவரங்களைக் கண்டறியவும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து எதனால் கட்டுப்பாட்டை இழந்தது என்பது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக விபத்து நேரிட்டதா அல்லது பேருந்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

காலை நேரத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து, அதன் உதவியாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Students rescued by breaking windows School bus that fell into agricultural land near Arani


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->