சொத்துத் தகராறில் கொடூரம்! தாய் மாமாவால் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை...!
brutal incident property dispute young man was hacked to death in broad daylight by his maternal uncle
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே, இடம் தொடர்பான முன்விரோதத்தில் வாலிபர் அரிவாளால் வெட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள 2 பேரை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பையாபுரம் மெயின் தெருவில், முகர்ஷினி சூப்பர் மார்க்கெட் அருகே நேற்று (9-10-2026) காலை சுமார் 11.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சுப்பையாபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் முத்துக்காளை (30) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது தாய் மாமாவான செல்லையா மகன் தாமஸ் பாண்டியன் (39) என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், சம்பவத்தன்று முத்துக்காளையை தாமஸ் பாண்டியனும், அவரது மச்சினரான வீராணம் பகுதியைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் அஜீத்குமார் (28) என்பவரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த முத்துக்காளை ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துக்காளைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ் கண்ணன், தற்போது திருநெல்வேலி ஊரக உட்கோட்டப் பொறுப்பையும் கவனித்து வருகிறார்.
அவர் மானூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுடன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார்.முதற்கட்ட விசாரணையில், இடப்பிரச்சினை காரணமாக முத்துக்காளை தரப்பினருக்கும், தாமஸ் பாண்டியன் தரப்பினருக்கும் இடையே நீண்டகாலமாக மனக்கசப்பு இருந்து வந்தது தெரியவந்துள்ளது.
இந்த முன்விரோதத்தின் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகவும், அந்த சம்பவம் தொடர்பாக மானூர் காவல் நிலையத்தில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முத்துக்காளை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மானூர் காவல் நிலைய காவலர்கள் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தாமஸ் பாண்டியன் மற்றும் அஜீத்குமார் ஆகிய இருவரும் சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவாகி உள்ளனர். அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து கைது செய்வதற்காக காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
brutal incident property dispute young man was hacked to death in broad daylight by his maternal uncle