மழைநீரில் மூழ்கிய பல்லாயிரம் ஆண்டு வரலாறு...! ஆதிச்சநல்லூர் அகழாய்வுக் குழிகளில் தேங்கிய தண்ணீரால் அதிர்ச்சி...!
Thousands years of history submerged in rainwater Shocked by water accumulated excavation pits Adichanallur
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மழை வெளுத்து வாங்கியதால், அகழாய்வுக் குழிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சுவடுகளை தாங்கி நிற்கும் முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட அரிய தொல்பொருட்கள் பாதுகாப்பின்றி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், தமிழர்களின் பழங்கால வாழ்வியலையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கும் முக்கியமான தொல்லியல் தளமாக திகழ்கிறது.
இங்கு இந்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. அப்போது நடத்தப்பட்ட ஆய்வில் முதுமக்கள் தாழிகள், பழங்காலப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான தொல்லியல் சான்றுகள் வெளிக்கொணரப்பட்டன.அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அவை கிடைத்த இடத்திலேயே பொதுமக்கள் பார்வையிடும் வகையில், நாட்டிலேயே முதன்முறையாக அந்தப் பகுதியில் அகழாய்வு தள அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.

கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். அப்போது, ஆதிச்சநல்லூரில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டத்துக்கான பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பகுதி ‘ஏ’, ‘பி’, ‘சி’ என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ‘சி’ பகுதியில் தற்காலிக கூரைகள் அமைக்கப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.அதிக எண்ணிக்கையில் தொல்பொருட்கள் கிடைத்த இந்தப் பகுதியில் அவற்றை பாதுகாக்க நிரந்தர கூரை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால், அந்தப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், இதனால் அகழாய்வுப் பொருட்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதிச்சநல்லூர் பகுதியில் திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. மழைநீர் வெளியேறுவதற்கு போதிய வசதி இல்லாததால், அகழாய்வுக் குழிகளுக்குள் தண்ணீர் புகுந்து தேங்கியது.இதில் 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் மழைநீரில் மூழ்கின.
அவற்றின் உள்ளே பாதுகாக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சான்றுகள் மற்றும் தொல்பொருட்கள் ஈரப்பதம் காரணமாக சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த அரிய வரலாற்றுச் சான்றுகள், முறையான பாதுகாப்பு இல்லாததால் மழைநீரில் சிக்கியிருப்பது தொல்லியல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தெரிவித்ததாவது,"ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மூலம் கிடைத்த முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் வரலாற்றின் அரிய சான்றுகளாக உள்ளன. அவற்றை முறையாகப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், தற்போது வெயில் மற்றும் மழையின் தாக்கத்தால் அவை சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாக இந்திய தொல்லியல் துறை இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். நிரந்தர கூரை அமைக்கும் பணிகளை விரைந்து முடிப்பதுடன், அகழாய்வுக் குழிகளுக்குள் மழைநீர் தேங்காத வகையில் உரிய வடிகால் வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள தொல்பொருட்கள் தமிழர்களின் தொன்மையான வரலாற்றை உலகுக்கு எடுத்துக்காட்டும் முக்கிய ஆவணங்களாகும். எனவே, அவற்றை எந்தவிதத்திலும் சேதமடையாமல் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
English Summary
Thousands years of history submerged in rainwater Shocked by water accumulated excavation pits Adichanallur