''திமுக என்றும் வலிமையானது என்பதை உணர்த்தியுள்ள மதுராந்தகம்''; பரந்தாமன்..!
Paranthaman says that Maduranthakam has demonstrated that the DMK remains a powerful force
''பொதுத்தேர்தலில் பெற்ற மூன்றாம் இடத்திலிருந்து, இடைத்தேர்தலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறி வந்திருப்பதன் மூலம், தமிழக மக்களின் உள்ளங்களில் இருந்து திமுகவை யாராலும் பிரிக்கமுடியாது என்பது உறுதியாகியுள்ளது.'' என திமுக சட்டத்துறை இணைச் செயலரும், மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளருமான வழக்கறிஞர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''குதிரை பேர தவெக அரசால் மக்கள் மீது திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்ட எனக்கு 52 ஆயிரம் வாக்குகளை அளித்த மதுராந்தகம் வாக்களார்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் களத்தில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. அதுவும் திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் களத்தில் ஆளும் கட்சியினரின் அனைத்து வகையான அத்துமீறல்களையும், அதிகார பலத்தையும் மீறி திமுக மீது நம்பிக்கை வைத்து உதயசூரியனுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குகள் திமுக என்றும் வலிமையானது என்பதை உணர்த்துகின்றன.
பொதுத்தேர்தலில் பெற்ற மூன்றாம் இடத்திலிருந்து, இடைத்தேர்தலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறி வந்திருப்பதன் மூலம், தமிழக மக்களின் உள்ளங்களில் இருந்து திமுகவை யாராலும் பிரிக்கமுடியாது என்பது உறுதியாகியுள்ளது.
மதுராந்தகத்தில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பினை எனக்கு வழங்கிய திமுக தலைவருக்கும், வழிநடத்திய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் களத்தில் பரப்புரையாற்றிய திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி எம்பி, திமுக உடன்பிறப்புகள், தோழமைக் கட்சியினர், பொதுவாக நான் வெற்றிப்பெற வாழ்த்திய பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி.''என்று பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில்கடந்த 06ஆம் தேதி, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன்வாக்குகள் நேற்று வெள்ளிக்கிழமை (அக்.9) எண்ணப்பட்டன.
இதில், மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 137 தபால் வாக்குகள் உட்பட 74,048 வாக்குகள் (39.96 சதவீதம்) பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 358 தபால் வாக்குகள் உட்பட 54,008 வாக்குகள் (29.15 சதவீதம்) பெற்று 2-வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Paranthaman says that Maduranthakam has demonstrated that the DMK remains a powerful force