12 ஆண்டுகால தொடர்பு விபரீதத்தில் முடிந்தது...! பெண்ணை கொன்றதாக காதலன் கைது...!
12 year relationship ended tragedy Boyfriend arrested killing woman
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், பிரேத பரிசோதனை முடிவில் கொலை என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பெண்ணின் நீண்டகால தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் தவுபிக் என்பவரை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (31) ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சுகுணா (26). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.சுகுணாவுக்கும், இஸ்மாயில் மைதீன் வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தவுபிக் (28) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்பு இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் 2 முறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரையும் அழைத்த காவலர்கள் எச்சரித்து அனுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவத்தன்று மதியம் இஸ்மாயில் மைதீன் வீதியில் சுகுணா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு சுகுணாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து கருங்கல்பாளையம் காவலர்கள் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.சுகுணாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு போதிய வசதி இல்லாததால் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இதற்கிடையே சுகுணாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை பி.பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஈரோடு-பவானி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
சாலையில் கற்கள் மற்றும் பலகைகளை வைத்து வாகனங்கள் செல்ல முடியாத வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தகவலறிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் முத்துக்குமார், ஜெயசிங் உள்ளிட்ட காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பியதுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது சுகுணாவின் உறவினர்கள், அவரது கழுத்தை நெரித்து தவுபிக் கொலை செய்ததாக குற்றம்சாட்டினர்.
அவரை உடனடியாக கைது செய்து தங்களிடம் காண்பிக்க வேண்டும் என்றும், கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.இதையடுத்து தவுபிக்கை காவலர்கள் கைது செய்தனர். பின்னர் காணொலி அழைப்பு மூலம் அவரை சுகுணாவின் உறவினர்களிடம் காண்பித்தனர்.இதைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தால் ஈரோடு–பவானி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், அப்பகுதியில் பதற்றமான சூழலும் நிலவியது.இதுகுறித்து கருங்கல்பாளையம் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது,"தவுபிக் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு குழந்தைகள் இல்லை. சம்பவத்துக்கு முந்தைய நாள் காலையில் சுகுணா, தவுபிக்கின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த தவுபிக், சுகுணாவின் கழுத்தை நெரித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் சுகுணா மயங்கி கீழே விழுந்து அசைவின்றி கிடந்துள்ளார்.இதையடுத்து தவுபிக், சுகுணாவை வீட்டுக்கு வெளியே சிறிது தூரம் இழுத்துச் சென்று சாலையோரத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து தவுபிக்கை தேடி கண்டுபிடித்த காவலர்கள் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே நடைபெற்ற பிரேத பரிசோதனையில், சுகுணா கழுத்தை நெரித்ததன் காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதனால் சந்தேக மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவலர்கள், தவுபிக்கை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
12 year relationship ended tragedy Boyfriend arrested killing woman