வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக டி20 தொடரிலிருந்தும் விலகல்! தொடரில் 2 மாற்று வீரர்களை அறிவித்த பிசிசிஐ! யார் யார் தெரியுமா?
Washington Sundar ruled out of T20 series due to injury BCCI announces 2 replacements for the series Do you know who is who
இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டை முன்னிட்டு நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இரண்டு போட்டிகள் முடிவில் 1–1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த தொடரின் கடைசி மற்றும் முடிவுத்தீர்மான போட்டி ஜனவரி 18ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி வதோதராவில் நடைபெற்ற போது, ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்தார். இதையடுத்து அவர் தொடரின் எஞ்சிய ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு மாற்றாக ஆயுஷ் படோனி சேர்க்கப்பட்டார். தற்போது அந்த காயம் எதிர்பார்த்ததை விட தீவிரமானது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நியூசிலாந்துக்கு எதிரான அடுத்ததாக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் வாஷிங்டன் சுந்தர் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் சுந்தரின் காயம் காரணமாக விலகியதால், இளம் சுழல் பந்து வீச்சாளர் ரவி பிஸ்னோய் இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீப காலங்களில் கிடைத்த குறைந்த வாய்ப்புகளிலேயே சிறப்பாக செயல்பட்ட பிஸ்னோய், சீனியர் வீரர்கள் இருப்பதால் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் சர்வதேச அரங்கில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையில், 2025–26 விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் ஒருநாள் தொடரில் விளையாடிய போது திலக் வர்மா வயிற்று பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் சிறிய அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. திலக் வர்மாவுக்கு மாற்றாக, அந்த முதல் மூன்று போட்டிகளுக்காக ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர் சமீப காலங்களில் சிறப்பான ஃபார்மில் இருந்து வருகிறார். ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர், ஐபிஎல் தொடரிலும் 600க்கும் மேற்பட்ட ரன்கள் சேர்த்து அசத்தியிருந்தார். அதோடு, 2014க்கு பிறகு 11 ஆண்டுகள் கழித்து பஞ்சாப் அணியை கேப்டனாக இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு சிறப்பான செயல்பாடுகளுக்குப் பிறகும், இந்திய டி20 அணியில் அவருக்கு இடம் கிடைக்காதது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் தேர்வுக் குழுவை கடுமையாக விமர்சித்த நிலையில், தற்போது திலக் வர்மா காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பு இந்திய ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Washington Sundar ruled out of T20 series due to injury BCCI announces 2 replacements for the series Do you know who is who