"இப்போது கிரிக்கெட் வீரர்களுக்குச் சிக்ஸர்கள், பணம் மட்டுமே குறி" - கெவின் பீட்டர்சன் காட்டம்!
kevin [ietersen condemn to young player six and money
கொல்கத்தா: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி 124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்களுக்குச் சுருண்டு 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடந்த 15 ஆண்டுகளில் இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்கா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், இந்திய பேட்ஸ்மேன்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நவீன கால பேட்டர்களின் தொழில்நுட்பம் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய பீட்டர்சன், "முதலில் ஆடுகளத்தின் தன்மையைப் பார்த்து ரன்களைச் சேர்க்க வேண்டும். அதன் விளைவுதான் கொல்கத்தா டெஸ்டில் நடந்தது" என்றார்.
நவீன பேட்டிங் குறித்த அவரது குற்றச்சாட்டுகள்:
"பேட்டர்கள் தற்போது சிக்ஸர்கள், ஸ்விட்ச்-ஹிட் அடிக்க மட்டுமே விரும்புகிறார்கள். ஒரு இன்னிங்ஸை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும், எப்படி ஆட்டமிழக்காமல் நீண்ட நேரம் விளையாட வேண்டும் என்று அவர்கள் கற்கவில்லை. இதுதான் எதார்த்தம்."
பணம் சார்ந்த விமர்சனம்:
தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் சிக்ஸர் அடித்து பணம் சம்பாதிக்கவே விரும்புகிறார்கள் என்று கடுமையாக விமர்சித்த பீட்டர்சன், ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் ஆடுவதோ அல்லது சுழற்பந்துகளைச் சமாளிப்பதோ முக்கியமில்லை என்றும், மாறாக அதிக வெளிச்சம், அதீத சத்தம், பணம் ஆகியவைதான் முக்கியத்துவம் பெறுவதாகவும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "அறையில் இருக்கும் யானை போலப் பணம் இருப்பதால் யாரும் அதைப்பற்றிப் பேசுவதில்லை. ஆனால், நான் பேசுவேன். உங்களால் முடிந்த அளவுக்குப் பணத்தைச் சேருங்கள். தொடர்ந்து சிக்ஸர்கள், ஸ்விட்ச்-ஹிட் அடியுங்கள்; உங்களது வங்கியில் சேமிப்பை உயர்த்துங்கள்!" என்று நவீன வீரர்களை நோக்கி நேரடியாகச் சாடினார்.
English Summary
kevin [ietersen condemn to young player six and money