93க்கு ஆல்-அவுட்... "நாங்கள் எதிர்பார்த்ததே வேற" ஆடுகளக் கடினம்... கௌதம் கம்பீர் விளக்கம்!
INDvsSA Gautam Gambhir test match loss
கொல்கத்தா: இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 124 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்தி, 93 ரன்களுக்குச் சுருண்டு 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தென்ஆப்பிரிக்கா இந்தப் போட்டியில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் ஆடுகளம் குறித்துப் பேசினார்.
"முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் விளையாட முடியாத அளவுக்கு கடினமான ஆடுகளம் கிடையாது. இந்த மாதிரியான ஆடுகளத்தையே நாங்கள் திடல் பராமரிப்பாளரிடம் கேட்டோம். அவர் எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இந்த ஆடுகளம் வீரர்களின் மன உறுதியைச் சோதிக்கும் விதமாகவே இருந்தது. தடுப்பாட்டத்தை நன்றாக வெளிப்படுத்திய வீரர்கள் இந்த ஆடுகளத்தில் ரன்கள் குவித்துள்ளனர். அக்ஷர் படேல், டெம்பா பவுமா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள்" என்று கம்பீர் தெரிவித்தார்.
ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமானது என்று பலர் கூறினாலும், "முதல் போட்டியில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியது வேகப்பந்து வீச்சாளர்களே" என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், "இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றிருந்தால், ஆடுகளம் குறித்து இத்தனை கேள்விகள் இருந்திருக்காது. எந்தச் சூழலிலும் விளையாட எங்களிடம் வீரர்கள் உள்ளனர்" என்று கௌதம் கம்பீர் உறுதியாகக் கூறினார்.
English Summary
INDvsSA Gautam Gambhir test match loss