யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர்; ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா; ஆஷிஷ் தனி பூர்த்தி அபார ஆட்டம்..!
India wins U18 Hockey Asia Cup title by defeating defending champions Japan
யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் ஜப்பானின் ககாமிஹாராவில் நடைபெற்றறு வருகிறது. இதில் விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 05-க்கு 03 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் சவாலான சூழ்நிலையில் இருந்த இந்திய அணி, பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதையடுத்து இன்று இறுதி போட்டியில் நடப்புச் சாம்பியனான ஜப்பானை எதிர்கொண்டது. முதல் லீக் சுற்றில் இந்தியாவைத் தோற்கடித்திருந்த ஜப்பான் அணி, இத்தொடரில் இதுவரை தோல்வியடையாமல் இருந்தது. இன்று கவாசாகி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இது இந்தியா வெல்லும் மூன்றாவது கோப்பையாகும். பாகிஸ்தான் இந்த பட்டத்தை இரண்டு முறை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரையிறுதி போட்டியில், மலேசியாவை 8-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஜப்பான் அணி, இறுதிப் போட்டியில் சிறப்பாகச் செயல்படத் தவறியது. இன்றைய இறுதி ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது.
அப்போது ஆஷிஷ் தனி பூர்த்தி அந்த பெனால்டியை கோலாக மாற்றி இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இரண்டாவது கால் பகுதியின் 28-வது நிமிடத்தில் ஆஷிஷ் இந்தியாவின் இரண்டாவது கோலை அடித்தார். 30-வது நிமிடத்தில் கேதன் குஷ்வாஹா கோல் கணக்கை 3-0 என மாற்றினார்.
தொடர்ந்து மூன்றாவது கால் பகுதியின் நான்காவது நிமிடத்தில் ஆஷிஷ் இந்தியாவுக்காக மற்றொரு கோலை அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஜப்பான் சார்பில், 52-வது நிமிடத்தில் நுமாடா காகு பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தார். இறுதியாக இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
English Summary
India wins U18 Hockey Asia Cup title by defeating defending champions Japan