'உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் திமுக தான் வரும்'; ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.என். நேரு பதிலடி..?
KN Nehru retorts to Aadhav Arjuna asserting that the DMK will emerge victorious again in the local body elections
சென்னை புளியந்தோப்பில் உள்ள உருது நடுநிலைப்பள்ளி கட்டடத் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திரு.வி.க. நகர் தவெக எம்.எல்.ஏ. பல்லவி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் குத்து விளக்கு ஏற்றும் போது, மெழுகுவர்த்தியைக் கேட்டும் மேயர் பிரியா தராததால் எம்.எல்.ஏ. பல்லவி அங்கிருந்து அதிருப்தியுடன் வெளியேறினார். இதுதொடர்பான காணொளி வெளியான நிலையில், எம்.எல்.ஏ. பல்லவி அவமானப்படுத்தப்பட்டதாக, தவெகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ஆர்.கே. நகரில் நேற்று தவெகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ''நாங்கள் இதுவரை அரசு விழாக்களில், கட்சியை பார்த்தது கிடையாது. ஆனால், மேயர் பிரியா, நமது சகோதரி பல்லவியை, ஒரு மெழுகுவர்த்தியை கூட கொடுக்காமல் அவமானப்படுத்தியிருக்கிறார்.

இப்போது, உதயநிதிக்கு நேருக்கு நேர் ஒரு சவால் விடுகிறேன். இன்னும் 08 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வர விருக்கிறது. 75 வருட திமுகவாக இருந்தால், 25-ல் 1 மேயர் இடத்தையாவது வென்று காட்டுங்கள். எங்களுடைய பல்லவி சகோதரி எப்போது அவமானப்படுத்தப்பட்டார்களோ, அப்போதே நாங்கள் தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டோம்'' என சவால் விடுத்திருந்தார்.
இதற்கு திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளார். இன்று சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா நடைபெற்றது.

இதில், கே.என். நேரு, சேகர்பாபு எம்.எல்.ஏ., மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய கே.என். நேரு, பொதுக் கூட்டத்தில் நான் அதிகம் பேசுவது இல்லை என்றும், திமுக தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நடுத்தர மக்களுக்கு உழைக்கும் இயக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இன்னும் 08 மாத காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கிறது. உங்களால் முடியுமா? என்பவர்கள் மத்தியில், முடியும் என்று நிரூபிக்கும் வகையில் இந்த கூட்டம் அமைந்திருக்கிறது. என்று கூறியுள்ளார். வரும் உள்ளாட்சித் தேர்தலில் புதியவர்கள் ( தவெக) யாரும் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், மீண்டும் திமுக தான் வரும் என பேசியுள்ளார்.
English Summary
KN Nehru retorts to Aadhav Arjuna asserting that the DMK will emerge victorious again in the local body elections