ஹர்ஷித் ராணா மீது விமர்சனம் வைத்தேன்! இப்போ "மோசமான பவுலிங் ஆல் ரவுண்டர் கிடையாது" என்று காட்ட துவங்கிருக்காரு.. ஸ்ரீகாந்த் பாராட்டு
I criticized Harshit Rana Now he starting to show that there no such thing as a bad bowling all rounder Srikanth praises him
நியூசிலாந்துக்கு எதிராக வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. நியூசிலாந்து நிர்ணயித்த 301 ரன்கள் இலக்கை இந்தியா 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து எட்டியது. இந்த வெற்றியில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் முக்கிய பங்காற்றினாலும், கடைசி கட்டத்தில் ஹர்ஷித் ராணா மற்றும் கே.எல். ராகுல் அமைத்த கூட்டணி தான் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.
இந்திய அணிக்காக ரோஹித் சர்மா 26 ரன்களும், கேப்டன் சுப்மன் கில் 56 ரன்களும், விராட் கோலி 93 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 49 ரன்களும் அடித்து வலுவான அடித்தளத்தை அமைத்தனர். ஆனால் முக்கிய தருணத்தில் கோலி, ஐயர் ஆகியோர் அவுட்டாகி, தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் சொற்ப ரன்னில் வெளியேறியதால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியாக மாறியது.
அந்த நெருக்கடியான சூழலில் களமிறங்கிய ஹர்ஷித் ராணா, அதிரடியாக 23 பந்துகளில் 29 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவருடன் இணைந்து கே.எல். ராகுல் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து, வாஷிங்டன் சுந்தருடன் சேர்ந்து இந்தியாவுக்கு வெற்றியை உறுதி செய்தார்.
இதற்கு முன்பு கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்த ஹர்ஷித் ராணா, இந்த போட்டியில் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார். நியூசிலாந்தின் 117 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை உடைத்து 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர், பேட்டிங்கிலும் மதிப்புமிக்க ரன்கள் சேர்த்து விமர்சகர்களின் வாயை அடைத்தார்.
இந்த ஆட்டம் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ஹர்ஷித் ராணாவையும் கே.எல். ராகுலையும் மனதார பாராட்டினார். “நான் ராணாவை அதிகமாக விமர்சித்துள்ளேன். அந்த நேரத்தில் அந்த விமர்சனம் அவசியமாக இருந்தது. ஒவ்வொரு வீரருக்கும் தன்னை நிரூபிக்க ஒரு தருணம் தேவைப்படும். இப்போது ராணா, தன்னை ஒரு முறையான ஆல் ரவுண்டர் என்று நிரூபிக்க தொடங்கியுள்ளார். விக்கெட் எடுக்கும் திறன் தான் முக்கியம், அதை அவர் இப்போது செய்து காட்டுகிறார்” என்று ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
மேலும், கே.எல். ராகுல் குறித்து பேசும் போது, “ஜடேஜாவுக்கு பின் ராகுல் பேட்டிங் செய்ய வந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தாலும், அவரை எந்த இடத்தில் இறக்கினாலும் அவர் போட்டியை வென்று கொடுப்பார். ஓப்பனிங், நம்பர் 4 அல்லது நம்பர் 6 – எங்கு அனுப்பினாலும் அவர் தனது கிளாஸை நிரூபிப்பார். ராணாவுடன் சேர்ந்து அவர் அமைத்த பார்ட்னர்ஷிப் தான் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது” என்று ஸ்ரீகாந்த் கூறினார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என்ற முன்னிலையை பெற்றுள்ள நிலையில், ஹர்ஷித் ராணா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
English Summary
I criticized Harshit Rana Now he starting to show that there no such thing as a bad bowling all rounder Srikanth praises him