கேப்டன் கில்லின் அதிரடி; கடைசி வரை திரில்; கொல்கத்தாவை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் .
Gujarat Titans Defeat Kolkata
19வது ஐபிஎல் 2026 தொடரின் 25-வது லீக் ஆட்டம் அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே ரன் ஏதுமின்றி (0)க்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அங்க்ரிஷ் ரகுவன்ஷி (08), டிம் சீஃபர்ட் (19) ஆகியோரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இந்த இக்கட்டான நிலையில் களமிறங்கிய கமரூன் கிரீன், 55 பந்துகளில் 79 ரன்கள் குவித்து அணியை ஓரளவு மீட்டெடுத்தார். ரோவ்மேன் பவல் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குஜராத் தரப்பில் காகிசோ ரபாடா 03 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ், அசோக் சர்மா தலா 02 விக்கெட்டினை வீழ்த்தினர். பிரதீஸ் கிருஷ்ணா மற்றும் ரஷித்கான் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
அடுத்து 181 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இதில் சாய் சுதர்சன் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நின்ற சுப்மன் கில் 50 பந்துகளில் 86 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவர் வரை சென்ற இந்த போட்டியில், குஜராத் அணி 19.4 ஓவர்களில் 05 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தத் தோல்வியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய 06 போட்டிகளில் 05 போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ள நிலையில், 01 புள்ளியினை மாத்திரம் பெற்றுள்ளது. இதன்காரணமாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் தனது தரவரிசையை உயர்த்தி 04-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
English Summary
Gujarat Titans Defeat Kolkata