தைப்பூசத்தின் வரலாறு! - Seithipunal
Seithipunal


அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுளான முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.

தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். கொடிய அரக்கன் தாரகனை அழித்து உலக உயிரினங்களை துன்பத்தில் இருந்து மீட்ட தினம் தை மாதப் பூச நட்சத்திர தினமாகும். 

தமிழகத்தில் இன்று தைப்பூச விழா உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. பழனி முருகன் கோவில் உட்பட பல முருகன் கோவில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். மேலும் முருகன் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது. பால் குடம், காவடி, பாதயாத்திரை என பக்தர்கள் முருகன் கோவில்களுக்கு சென்று தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.

தைப்பூச வரலாறு :

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. அதனால் பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.

எங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே எங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த, சக்தி மிக்க ஒருவரை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.

கருணைக் கடலான சிவபெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன் என்னும் முருகன் ஆவார். 

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான ஆறு தீப்பொறிகள் ஆறு அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால் அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தார்.

அன்னை பார்வதிதேவி ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். 

அம்பாள் அளித்த வேல்-ஐ ஆயுதமாகக் கொண்டே முருகன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அசுரர்களை திருச்செந்தூரில் வதம் செய்து தேவர்களை பாதுகாத்தார். 

அதனால் முருகரைப் போலவே அவரது வேலுக்கும் தனி சக்தியுண்டு. அசுரர்களை வதம் செய்ய உதவிய முருகப்பெருமானின் வேல்-ஐ பூஜிப்பதாலேயே தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

தைப்பூசத்தில் முருகனுக்கு பலவித பூஜைகள், நிவேதனங்கள் என செய்து ஆராதிப்பதுடன் கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை பாராயணம் செய்யலாம். தைப்பூச தினத்தில் முருகன் அருள்பாலிக்கும் தலத்திற்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.

சிறப்புகள் :

தைப்பூசத்திருநாளில் முருகக் கடவுளிற்கு படைக்கும் காணிக்கைகளை காவடிகளாக எடுத்துக் கொண்டு நடைபயணமாக அவர் சன்னதி வந்து காணிக்கைகளை அவருக்கு செலுத்தி பூஜை செய்வதை தான் தைப்பூச திருநாளின் சிறப்பாகும்.

வாழையோ, நெல்லோ, பழங்களோ தமது இடத்தில் எது விளைந்தாலும் தான் உண்பதற்கு முன் அதை இறைவனிற்கு அர்ப்பணித்துப் படைப்பதற்கும், ஆடு, மாடு, கோழி போன்றவற்றை காணிக்கையாக அர்ப்பணிப்பதற்கும், பயணிக்கும் விரத விழாவே தைப்பூச திருவிழாவாகும்.

முருகனின் அறுபடை வீடுகளில் பழனிக்கே மக்கள் முக்கியத்துவம் கொடுத்து தைப்பூச திருவிழாவிற்கு நடைபயணமாக செல்வது தொன்று தொட்ட வழக்கமாக இருக்கிறது.

தைப்பூசத்தில் கோவில்களில் தெப்ப உற்சவம் நடைபெறும். கோவிலில் இருக்கும் கடவுளை தேரில் வைத்து ஊர்வலமாக தெரு முழுவதும் அழைத்து வருவர். இந்த நன்னாள் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thaippoosaththin history


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->