இன்று தை கிருத்திகை.... குறைகள் அனைத்தும் நீங்க... முருகனை வழிபடுங்கள்...!!
thai karthigai 2021
முருகனுக்கு உகந்த விரத நாட்களில் கிருத்திகை விரதம் சிறப்பு மிக்கது. அதிலும் ஒரு வருடத்தில் வரும் மூன்று கிருத்திகை தினங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தை மாதத்தில் வரும் தை கிருத்திகை, கிருத்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை என இந்த மூன்றும் கிருத்திகையுமே முருகப்பெருமானுக்கு உகந்த நாட்கள். கிருத்திகையில் விரதம் இருந்து சேவல் கொடியோனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
புத்திர பாக்கியம் தரும் தை கிருத்திகை விரதம் :
தை கிருத்திகை இந்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் வரும் கிருத்திகையில் விரதமிருந்து முருகப்பெருமானை வணங்கி வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம். மேலும் புத்திரபாக்கியம் கிடைக்கும்.
சித்திரை முதலாகத் தொடங்கும் பன்னிரு மாதங்களில் பத்தாவது மாதமாக வருவது தை மாதம். பத்து மாதம் கருவுற்று, பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்மணிகள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் முருகனை மனமார நினைத்து விரதம் இருந்துவழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும், கட்டாயம் குழந்தையும் பிறக்கும் என்பது நம்பிக்கை.
'தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும்!" என்று சிவபெருமானே வாக்குறுதி அளித்ததாகவும் ஐதீகம்.
செவ்வாய் தோஷம் போக்கும் தை கிருத்திகை விரதம் :
செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மனை, சொத்து வழக்குகளில் பிரச்சனைகள், சகோதரர்களால் சங்கடங்கள், குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தைக் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து கந்தனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் சேரும்.
இன்றைய தினம் நாள் முழுவதும் விரதம் இருந்து மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். மேலும் இன்று முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் மட்டும் அருந்தியும் விரதத்தை அனுஷ்டிக்கலாம்.