கிராம தெய்வங்கள் பகுதியில் இன்று.. ஆண் தெய்வங்களின் வழிபாடு..! - Seithipunal
Seithipunal


மண்மணக்கும் கிராம தெய்வங்கள்:

ஆண் தெய்வ வழிபாடு :

ஆண் தெய்வங்களில் சில முதன்மை தெய்வங்களாகவும், பல முதன்மை தெய்வங்களுக்கு துணைமை தெய்வங்களாகவும் விளங்குகின்றன. துணைமை தெய்வங்களை 'பரிவாரத் தெய்வங்கள்" என்றும் கூறுவதுண்டு.

முதன்மை தெய்வங்கள் :

தனித்த கோவில்களையும், வழிபாட்டு முறைகளையும் தன்னகத்தே கொண்ட தெய்வங்களே இங்கு முதன்மை தெய்வங்கள் ஆகும். இவை ஊர் தெய்வங்களாகவோ, காவல் தெய்வங்களாகவோ வழிபடப்படும்.

தமிழகத்தில் பரவலாக அய்யனார் வழிபாடும், சுடலை மாடன் வழிபாடும், அண்ணன்மார் சாமி வழிபாடும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. அந்தந்த பகுதி மக்களின் வழிபாட்டு முறைகளுக்கு ஏற்ப ஆண்டுதோறும் விழா எடுக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தெய்வத்திற்கும் என்று தனித்த வழிபாட்டு முறைகள் உள்ளன. 

அய்யனார் :

அய்யனார் தெய்வம் கிராமத்தை காக்கும் ஊர் பொது தெய்வமாக, காவல் தெய்வமாக பல்வேறு ஊர்களில் வழிபடப்படுகிறது. கூடமுடைய அய்யனார், செங்குளத்து அய்யனார், கொக்குளத்து அய்யனார் என்ற பெயர்களில் வணங்கப்படுகிறது.

அய்யனார் கோயில்கள் திறந்த வெளியில் பெரும்பாலும் கண்மாய் கரைகளில் நீர்நிலையை ஒட்டியுள்ள பகுதிகளில், வயல் வெளிகளில், ஆலமர நிழலில் கிழக்குப் பார்த்த வாசலுடன் அமைந்திருக்கும். வெள்ளை குதிரை, வேட்டை நாய், வீரர்கள் புடைசூழ அய்யனார் வீற்றிருப்பார். பிரம்மாண்டமான அளவில் அய்யனார் சிலை இருப்பதும் அதனை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸ், சிப்பாய்கள் நிற்பதும், நாய், பூதங்கள் போன்ற பல உருவங்கள் இருப்பதும் பார்ப்போரை மிரளச் செய்யும்.

அய்யனார் பெரிய கும்பிடின் போது பக்தர்கள் மண்குதிரைகளை காணிக்கையாக செலுத்தும் வழக்கம் காணப்படுகிறது. அய்யனாருக்கு செய்யப்படும் அத்தனை சிறப்புகளும் அவரது வாகனமான குதிரைக்கும் செய்யப்படுகிறது. பல இடங்களில் குதிரையையே அய்யனாராக வழிபடும் நிலையும் காணப்படுகிறது.

சுடலை மாடன் :

தமிழகத்தின் பல பகுதிகளில் சுடலை மாடன் வழிபாடு சிறப்பு பெற்று விளங்குகிறது. சுடலை என்பது சுடுகாட்டையும், மாடன் என்பது மாட்டு தலையை உடையவன் அல்லது காளையை வாகனமாக உடையவன் என்றும் பொருள்படும். காவல் தெய்வமாக வழிபடப்படும் சுடலை மாடன் கோவில்கள் சுடுகாட்டிற்கு அருகிலேயே அமைந்திருக்கும். சுடலை மாடனுக்கான கொடைவிழா மூன்று நாட்கள் வெகு சிறப்பாக நடத்தப்படும். 

சுடலை மாடன் வழிபாடு இரவிலேயே நிகழும். ஆடு, சேவல், பன்றி ஆகியவை பலி கொடுக்கப்படும். பூசாரி குருதி கலந்த உணவை சுடுகாட்டிற்கு எடுத்து சென்று குருதி சோற்றை (ஆவிகளுக்கு) வானை நோக்கி சூறையிடும் சடங்கு தவறாது இடம்பெறும்.

அண்ணன்மார் சாமி :

தமிழகத்தில் பல பகுதியில் அண்ணன்மார் சாமி வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. பொன்னர், சங்கர் என்ற இரு சகோதரர்களே அண்ணன்மார் என்ற பெயரில் தெய்வமாக வழிபடப்படுகின்றன. பெரிய குதிரைகளின் மேல் அமர்ந்தவாறு பொன்னர், சங்கர் சிலைகள் அமைந்திருக்கும். அண்ணன்மார் சாமி கதை பாடல் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வழிபாட்டின் போது இக்கதை உடுக்கை பாட்டாக பாடப்படும். 

துணைமைத் தெய்வங்கள் :

தலைமை தெய்வங்களுக்கு துணையாகவோ, தனித்த நிலையில் சிறிய அளவிலோ, வழிபாட்டிற்கு உட்படுத்தப்படும் தெய்வங்களே துணைமை தெய்வங்கள் ஆகும். இவை பரிவாரத் தெய்வங்கள் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. 

பெருந்தெய்வ வழிபாட்டிலும் இப்பரிவார தெய்வங்களை காண முடியும். இவை ஆண் தெய்வங்களாகவோ, பெண் தெய்வங்களாகவோ அமையும். முதன்மை தெய்வங்கள் ஊர்க்காவலுக்கும், வேட்டைக்கும் செல்லும்போது பரிவாரத் தெய்வங்கள் உடன் செல்வதாக கூறப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

grama deivangal aan deivangal vazhipadu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->