முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்? - Seithipunal
Seithipunal


தை மாதம் என்றாலே நம் நினைவிற்கு வரும் கடவுள் முருகன் தான். தை மாதத்தில்தான் தைப்பூசம் போன்ற விசேஷங்கள் நடைபெறும். இம்மாதத்தில்தான் பக்தர்கள் முருகனுக்கு காவடி எடுத்து நடைபயணம் மேற்கொள்கின்றனர்.

முருகனுக்கு கந்தன், குமரன், வேலன், சரவணபவன், ஆறுமுகம், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கின்றன. முருகனுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள் வந்தது என்றும், ஒவ்வொரு பெயருக்கும் என்ன காரணங்கள் என்றும் இப்போது பார்க்கலாம்.

முருகன் : 

முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது.

சரவணபவன் : 

சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்றும் பொருள்படும். 

ச என்றால் மங்களம், ர என்றால் ஒளிக்கொடை, வ என்றால் சாத்வீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்கிற பொருளில் மங்களம், ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர்.

ஆறுமுகம் :

சிவபெருமானுக்குள்ள ஐந்து முகங்களுடன், அதாவது ஒரு முக லிங்கத்தில் இருந்து ஐந்து முக லிங்கங்கள் வரை உடையவை ஆகும். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு திசையைப் பார்த்துக்கொண்டு இருக்கும். ஆறாவது முகம் அதோமுகம் என்று சொல்லப்படும். அது பாதாளத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கும் எனவும், சக்திகள் அதில் இருந்தே ஆரம்பம் எனவும் சொல்லப்படுகிறது. 

இந்த ஆறாவது முகத்தில் இருந்துதான் சிவஸ்வரூபமான சுப்ரமணியர், நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியதாகவும் சொல்லப்படுகிறது. பரம்பொருளான அந்த ஈசனுக்கு ஆறுமுகங்கள் என்றாலும் நம்மால் அறியும் வகையில் இருப்பவை ஐந்து முகங்களே ஆகும். அதனால் தான் சுப்ரமணியருக்கு இறைவனின் சொரூபம் என உணர்த்தும் வகையில் ஆறுமுகங்கள் அமைந்தது எனவும் சொல்லப்படுகிறது. இதனால்தான் சிவபெருமானுக்குள்ள ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர்ந்து ஆறுமுகங்களானதால் ஆறுமுகம் எனும் பெயர் வந்தது. திரு, புகழ், ஞானம், வைராக்கியம், வீரியம், ஐஸ்வர்யம் என்பவைதான் ஆறுமுகங்கள் என்றும் கூறுவார்கள்.

கந்தன் : 

கந்து என்றால் நடுவில் இருப்பது. சிவனுக்கும் உமையாளுக்கும் நடுவில் இருப்பதால் கந்தன் என்கிற பெயர் ஏற்பட்டது. ஸ்கந்தம் என்றால் தோள் என்ற அர்த்தமும் உண்டு. இதற்கு வலிமையுடையவன் என்றும் பொருள்படும்.

வேலன் :

வேலன் என்பது வெற்றியைத் தருகிற வேலைக் கையில் ஏந்தியதால் வந்த பெயர். முருகனுக்கு அடையாளமும் இந்த வேல்தான்.

சுப்பிரமணியம் : 

சு என்றால் ஆனந்தம். இன்பமும் ஒளியும் வடிவாக உடையவன் என்பது இதன் அர்த்தம். புருவ மத்திய (ஆக்ஞை) ஸ்தானத்தில் ஆறு பட்டையாக உருட்சி மணியாக, பிரகாசம் பொருந்திய ஜோதிமணியாக விளங்குவதால் சுப்பிரமணியன் என்று அழைக்கப்பட்டார்.

கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்றும், அப்பெண்களுக்கு வாகுலை என்ற மற்றொரு பெயர் உள்ளதால் வாகுலேயன் என்றும், ஆண்டிக் கோலத்தில் ஞானப்பழமாக விளங்குவதால் பழநி என்றும், தனது அடியவர்களை உற்ற வேளையில் வந்து காக்கும் சிறப்பால் வேலைக்காரன் என்றும் சிவன், சக்தி, திருமால் மூவரையும் இணைக்கும் தெய்வமாக இருப்பதால் மால் மருகன் என்றும் பெயர்கள் வழங்கப்படுகிறது.

இது தவிர இன்னும் எத்தனையோ பெயர்கள் முருகனுக்கு வழங்கப்படுகிறது. முருகக்கடவுள் தமிழர்களால் தமிழ்க்கடவுள் என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

god murukan name


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->