சூரிய பிரபை முதல் சந்திர பிரபை வரை: ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் உலா...!
From Surya Prabha Chandra Prabha Lord Venkateswara procession seven different vehicles single day
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவமாகப் போற்றப்படும் ரத சப்தமி திருவிழா இன்று மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற்றது. கோவில் உள் பிரகாரம் முழுவதும் 10 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கோவில் முழுவதும் மனம் கவரும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர்களால் அழகுபடுத்தப்பட்டது.

ரத சப்தமி திருநாளை முன்னிட்டு, ஏழுமலையான் ஒரே நாளில் 7 விதமான வாகனங்களில் எழுந்தருளி, மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.அதிகாலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட நிலையில் ஏழுமலையான் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.
பின்னர் 9 முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்தில்,11 முதல் 12 மணி வரை தங்க கருட வாகனத்தில்,1 முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்தில் உலா வந்தார்.மாட வீதிகளில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என விண்ணதிர முழக்கமிட்டு, கற்பூர தீபம் ஏற்றி தீபாரதனை செய்து பக்தி பரவசத்தில் மூழ்கினர்.
மதியம் 2 மணி முதல் 3 மணி வரை புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. அதன் பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடி தங்கள் பாவங்களை நீக்கும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
மாலை 4 முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும்,6 முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும்,இரவு 8 முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்திலும் ஏழுமலையான் எழுந்தருளி அருள்பாலித்தார்.
ரத சப்தமி திருவிழாவைக் காண நேற்று முதலே பக்தர்கள் திருப்பதி மலைக்கு பெருமளவில் திரண்டனர். இதனால் அலிபிரி சோதனை சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல மணி நேரம் வாகனங்கள் சிக்கிக் கொண்டதால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேரடி இலவச தரிசன காத்திருப்பு அறைகள் நிரம்பி வழிந்தன. அதற்கு வெளியே 5 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சிலர் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்காக திருப்பதி மலையில் 85 இடங்களில் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று மட்டும் 4 லட்சம் லட்டுகள் வழங்கப்பட்டன. கூடுதலாக 5 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
திருவிழாவை முன்னிட்டு நேர ஒதுக்கீட்டு தரிசனம் மற்றும் வி.ஐ.பி. தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன.நேற்று ஒரே நாளில் 76,654 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 34,080 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.3.81 கோடி காணிக்கை வசூலானது.
English Summary
From Surya Prabha Chandra Prabha Lord Venkateswara procession seven different vehicles single day