அரசுப் பள்ளி ஆசிரியை அராஜகம்! பிஞ்சுகளை கால் அமுக்கவிட்ட அதிர்ச்சி வீடியோ!
Andhra Pradesh Tribal government school teacher viral video
ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் மேலியபுட்டி மண்டலத்தில் உள்ள பந்தபள்ளி பெண்கள் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் பாட நேரத்தில் நாற்காலியில் அமர்ந்தபடி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சில மாணவிகள் அவரின் கால்களை பிடித்து மசாஜ் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை தொடங்கினர். விளக்கம் கேட்டபோது, “முழங்கால் வலியால் அவதிப்பட்டேன். அன்று தவறுதலாக கீழே விழுந்தேன். மாணவிகள் தாமாகவே உதவுவதாகக் கூறி கால்களைத் தொட்டனர்” என்று ஆசிரியை விளக்கமளித்தார்.
அந்த விளக்கம் அதிகாரிகளை திருப்திப்படுத்தாததால், விசாரணை முடியும் வரை அவரை தற்காலிகமாக இடைநீக்கம் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் கல்வி முறை மற்றும் ஆசிரியர் நடத்தை குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இப்படிப்பட்ட செயல்கள் மீண்டும் நடக்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, இதற்கு முன்பு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பணியாற்றிய ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை, மாணவர்களை தனது காரை கழுவவும் தனிப்பட்ட வேலைகளைச் செய்யவும் கட்டாயப்படுத்தியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
English Summary
Andhra Pradesh Tribal government school teacher viral video