மகளிர் தின சர்ப்ரைஸ்...! பெண்களுக்கு மாதம் ரூ.2000 மற்றும் 5 லட்சம் பேருக்கு இருசக்கர வாகனம்...! - இபிஎஸ் வாக்குறுதி
Womens Day Surprise 2000 per month women and two wheelers 5 lakh people EPS Promise
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “எனது அன்பான தாய்மார்களுக்கும், அருமை சகோதரிகளுக்கும், நாளைய தலைமுறையை வழிநடத்தப் போகும் இளம் பெண்களுக்கும் மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

ஒரு குடும்பத்தின் வலுவான அடித்தளமாக இருந்து, துன்பங்களையும் சவால்களையும் தாங்கிக்கொண்டு அன்பையும் அரவணைப்பையும் பகிர்ந்து வரும் பெண்களின் தியாகம் அளவிட முடியாதது என அவர் குறிப்பிட்டார்.
பெண்களின் அந்த அர்ப்பணிப்பை உணர்ந்ததால்தான் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா பெண்கள் முன்னேற்றத்திற்காக பல புரட்சிகர நலத்திட்டங்களை கொண்டு வந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
தற்போதைய திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு குறைபாடு மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக பல குடும்பங்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றன என்ற கவலையும் அவர் வெளியிட்டார். குடும்ப பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு வாழும் பெண்களின் சுமையை குறைப்பது தான் தனது முக்கிய கடமையாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், குடும்பத்தின் பொருளாதாரத் தூணாக இருக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும், அது வெறும் நிதியுதவி மட்டுமல்ல; பெண்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் அளிக்கப்படும் மரியாதையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பெண்கள் தன்னம்பிக்கையுடன் சமூகத்தில் முன்னேறுவதற்காக 5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என உறுதியளித்தார்.
பெண்கள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும்; அவர்கள் பயணிக்கும் இடங்களிலும், பணிபுரியும் இடங்களிலும், குழந்தைகள் கல்வி பெறும் சூழலிலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் தான் எப்போதும் உறுதியாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இறுதியாக, குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தாய்மையுடன் அர்ப்பணிப்பாக சேவை செய்து வரும் அனைத்து பெண்களுக்கும் மீண்டும் தனது இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
English Summary
Womens Day Surprise 2000 per month women and two wheelers 5 lakh people EPS Promise