பெண்களுக்கு வீட்டிக்குள்ளும் பாதுகாப்பில்லை...! - சாத்தான்குளம் கொடூரச் சம்பவத்தால் தவெக அரசு மீது கனிமொழி கடும் தாக்கு...!
Women not safe even at home Kanimozhi strongly attacks tvk government over brutal incident at Sathankulam
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாகவும், மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு தவெக அரசின் பொறுப்பற்ற நிர்வாகமே காரணம் என்றும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (50). இவரது மனைவி மேரி ரெஜிலா (39). இந்தத் தம்பதியினருக்கு பிளெஸ்ஸி (15), பிரின்ஸா பாப்பா (14) ஆகிய இரு மகள்களும், பிளெசெட் ராஜா (10) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்மக் கும்பல், அங்கிருந்தவர்களைக் கொடூரமாக வெட்டித் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் மேரி ரெஜிலா உயிரிழந்தார். அவரது கணவர் முத்துகிருஷ்ணன் மற்றும் மகன் பிளெசெட் ராஜா ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தம்பதியினரின் இரு மகள்களும் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள கனிமொழி, தமிழகத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலைச் சுட்டிக்காட்டி, தவெக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"சாத்தான்குளம் அருகே வீட்டிற்குள் புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் மேரி ரெஜிலா என்ற பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது கணவரும் மகனும் பலத்த காயமடைந்துள்ள நிலையில், அவர்களது இரு பெண் குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர்.பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வீட்டுக்குள்ளும் பாதுகாப்பில்லை; வெளியிலும் பாதுகாப்பில்லை என்ற அச்சமூட்டும் நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளியிருப்பது பொறுப்பற்ற தவெக அரசு.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாள்தோறும் செய்திகளாகி வரும் நிலையில், இத்தகைய குற்றங்களைத் தடுக்காமல் ரீல்ஸ் அரசின் சினிமாத்தனமான அதிரடிப்படை என்ன செய்து கொண்டிருக்கிறது?தங்களுக்கு வாக்களித்த பெண்களின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்குவதுதான் தவெக அரசு அவர்களுக்குக் கொடுக்கும் பரிசா?குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம், திருவைகுண்டம் கள்ளபிரான் கோவில் அருகே காவலாளி ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் எனத் தூத்துக்குடி மாவட்டமே தவெக ஆட்சியில் கொலைக்களமாக மாறிவிட்டது.
ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் எவ்விதப் பொறுப்புணர்வும் இன்றி செயல்படுவதால், எத்தனை உயிர்கள் பறிபோனாலும் தங்களுக்கு எதுவும் நேராது என்ற துணிச்சலில் குற்றவாளிகள் தொடர்ந்து இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.முதலமைச்சர் விஜய், மக்கள் மீது அக்கறை கொண்டு செயல்படத் தெரிந்த ஒருவரிடம் காவல்துறையின் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
வேளாங்கண்ணியில் இரண்டு சிறுமிகள் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த அந்தச் சிறுமிகள் இருவரும் வீட்டில் கோபித்துக்கொண்டு வேளாங்கண்ணிக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அவர்களுக்கு இத்தகைய கொடுமை நிகழ்ந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்த அரசு காட்டும் மெத்தனத்தால், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சாதாரண நிகழ்வுகளாக மாறிவருகின்றன. தமிழ்நாட்டுப் பெண்களுக்குத் தாங்கள்தான் பாதுகாவலர்கள் என வீர வசனம் பேசுபவர்களின் ஆட்சியில், பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து அரங்கேறும் குற்றங்களே அவர்களது நிர்வாகத்தின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
இந்தக் கொடூரச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று கனிமொழி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Women not safe even at home Kanimozhi strongly attacks tvk government over brutal incident at Sathankulam