சபை நடவடிக்கைகள் முழுவதும் ‘லைவ்’ ஆகுமா...? தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேரலை குறித்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கொடுத்த அதிரடி அப்டேட்...!
Will proceedings House be live Speaker JCD Prabhakar action packed update live broadcast Tamil Nadu Assembly session
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், தமிழ்நாடு வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, அதில் அரசுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததன் மூலம் ஆட்சி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
த.வெ.க. தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. புதிய ஆட்சியின் முதல் அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய நிர்வாக மற்றும் மக்கள் நலன் சார்ந்த முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, த.வெ.க. ஆட்சியில் நடைபெறவுள்ள முதல் சட்டப்பேரவைக் கூட்டத்திற்கான அறிவிப்பை பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெளியிட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு பேரவை மண்டபத்தில் கூடும் என்றும், அன்றைய தினம் ஆளுநர் உரையாற்றுவார் என்றும் தெரிவித்தார்.
மேலும், அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் பேரவையின் நிகழ்ச்சி நிரல் மற்றும் அடுத்தகட்ட பணிகள் தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும், அந்தக் குழுக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.
வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் தொடர்பான மரபுகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஆளுநர் உரையின்போது சட்டப்பேரவையில் நடைபெறும் நடைமுறைகளை அனைவரும் நேரடியாக காண முடியும் என குறிப்பிட்டார்.
மேலும், அரசின் பெரும்பான்மை நிரூபிப்பு நடைபெற்ற காலகட்டத்தில் சட்டப்பேரவை நடவடிக்கைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் நேரலையில் கவனித்ததாகவும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அரசியல் செயல்பாடுகளை அறியும் ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சட்டப்பேரவையில் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை மக்கள் நேரடியாக காண விரும்புகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளதாக கூறிய அவர், சட்டமன்ற நிகழ்வுகளை பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
English Summary
Will proceedings House be live Speaker JCD Prabhakar action packed update live broadcast Tamil Nadu Assembly session