ஜெகநாத் மிஸ்ராவின் ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’ தவெகவில் இணைவு? யார் இவர்? தவெகவில் எம்.எல்.ஏ ஆனது எப்படி?
Will Jagannath Mishra Namadhu Makkal Munnetra Kazhagam merge with TVK Who is he How did he become an MLA representing TVK
தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் தலைமையிலான கட்சியில், கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ராவின் ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’ இணைக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த தவெக, தொடர்ந்து தனது அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில், அதிமுகவில் இருந்தும் பல முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
இந்த சூழலில், ஒரு அரசியல் கட்சியே முழுமையாக தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற இந்தக் கட்சி கடந்த 2025 செப்டம்பர் மாதம் மதுரையில் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனத் தலைவராக கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா உள்ளார்.
தேசிய செட்டியார் பேரவையின் தலைவராக செயல்பட்டு வந்த ஜெகநாத் மிஸ்ரா, பின்னர் தனது சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஆரம்பத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த அவர், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியல் நிலைப்பாட்டை மாற்றி, தவெகவுடன் கைகோர்த்தார்.
இதையடுத்து, தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வாய்ப்பு ஜெகநாத் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்டது. அந்தத் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ ராமகிருஷ்ணனை எதிர்த்து களமிறங்கிய அவர், 85,394 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ராமகிருஷ்ணன் 84,643 வாக்குகள் பெற்று வெறும் 751 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், ஜெகநாத் மிஸ்ரா தனது ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’ கட்சியை முழுமையாக தவெகவில் இணைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், இந்த இணைப்பு நடந்தால் தென் மாவட்டங்களில் தவெகவின் அமைப்பு மேலும் வலுப்பெறும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அடுத்த சில நாட்களில் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் தவெக தலைமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Will Jagannath Mishra Namadhu Makkal Munnetra Kazhagam merge with TVK Who is he How did he become an MLA representing TVK