திருநெல்வேலியை விட்டு சாத்தூரில் நயினார் போட்டி ஏன்?பாஜகவின் ‘மெகா பிளான்’! யார் இந்த நயினார் நாகேந்திரன்!
Why is Nayinar contesting from Tirunelveli to Sathur BJP mega plan Who is this Nayinar Nagendran
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தனது அரசியல் அடையாளமாக இருந்த திருநெல்வேலி தொகுதியை விட்டு, இம்முறை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
1989-ஆம் ஆண்டு அதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நயினார் நாகேந்திரன், களப்பணியாளராக இருந்து அமைச்சர்வரை உயர்ந்தவர். 2001-ல் திருநெல்வேலியில் வெற்றி பெற்று அமைச்சராக பதவி வகித்த அவர், அதே தொகுதியில் பலமுறை போட்டியிட்டு வெற்றி, தோல்வி என கலவையான அனுபவங்களை சந்தித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட மாற்றங்களால் 2017-ல் பாஜகவில் இணைந்த அவர், 2021-ல் மீண்டும் திருநெல்வேலியில் வெற்றி பெற்று, பின்னர் தமிழக பாஜக தலைவராக உயர்ந்தார்.
இந்நிலையில், தனது ‘கோட்டை’ எனக் கருதப்பட்ட திருநெல்வேலியை விட்டு சாத்தூருக்கு மாறியிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசியல் ஆய்வாளர்களின் பார்வையில், இது ஒரு திட்டமிட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது.
சாத்தூர் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் நயினார் நாகேந்திரனின் சமூக வாக்குகள் கணிசமாக இருப்பது, அவருக்கு சாதகமான அம்சமாக கருதப்படுகிறது. மேலும், அதிமுக கூட்டணியின் வலுவான அடித்தளமும் அந்த தொகுதியில் இருப்பதால், கூட்டணி வாக்குகள் இணைந்தால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என மதிப்பிடப்படுகிறது.
மேலும், மாநிலத் தலைவராக இருப்பதால் முழு தமிழகத்திலும் பிரசாரம் செய்ய வேண்டிய சூழலில், சாத்தூர் போன்ற ‘சேஃப்’ தொகுதியை தேர்வு செய்வது அரசியல் ரீதியாக சுமையை குறைக்கும் ஒரு நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
திருநெல்வேலியில் கடுமையான போட்டியை எதிர்கொண்ட அனுபவம், இந்த முறை மாற்று முடிவுக்கு காரணமாக இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த ‘மெகா பிளான்’ நயினார் நாகேந்திரனுக்கு வெற்றியைத் தருமா அல்லது எதிர்பாராத சவால்களை உருவாக்குமா என்பது வரும் மே 4ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில்தான் தெளிவாகும்.
English Summary
Why is Nayinar contesting from Tirunelveli to Sathur BJP mega plan Who is this Nayinar Nagendran