திமுக எதிர்ப்பு ஓட்டுகள் எங்கே போகும்..? அறுவை செய்யப்போவது யார்? அதிவேகத்தில் அதிமுக..ஆமை வேகத்தில் விஜய்! - Seithipunal
Seithipunal


2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உருவான மெகா கூட்டணி அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட பல கட்சிகளை இணைத்த இந்த கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர், சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டு விவரங்களை வெளியிட்ட அவர்,“கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளைத் தவிர, மீதமுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுகவே நேரடியாக போட்டியிடும். 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இந்த கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள், தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுக்கும் இடங்கள் வழங்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடுவார் என்ற தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த இபிஎஸ்,“அரசியலில் சின்ன கட்சி, பெரிய கட்சி என்ற பாகுபாடு கிடையாது. எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளை நாங்கள் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்” என்று கூறினார்.

மேலும் கூட்டணிக் கட்சிகள் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது அவர்களின் விருப்பம் என்றும், திமுக போல எந்த நிபந்தனையும் தாங்கள் விதிக்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதால் திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,
“மக்களுக்காக தெருவில் இறங்கி போராடுபவர்களுக்கே எதிர்ப்பு வாக்குகள் கிடைக்கும். கடந்த 5 ஆண்டுகளாக மக்களின் பிரச்சினைகளுக்காக அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தான் போராடினோம். மக்கள் இந்த ஆட்சியை அகற்ற முடிவு செய்து விட்டார்கள்” என்றார்.

திமுக மீது கடுமையாக விமர்சனம் செய்த அவர்,“கரூரில் மக்களை கொட்டகைகளில் அடைத்து வைத்து பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முயற்சிக்கிறார்கள். எத்தனை கொட்டகைகள் போட்டாலும் மக்களின் மனதை மாற்ற முடியாது” என குற்றம்சாட்டினார்.

மேலும் அதிமுக ஆட்சியில் 63 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், புதிய விமான நிலையங்கள் போன்ற பல கட்டமைப்பு வளர்ச்சிகள் செய்யப்பட்டதாகவும் அவர் பட்டியலிட்டார். தற்போது திமுக ஆட்சியில் தமிழகம் கடன் வாங்குவதில் மட்டுமே முன்னிலை மாநிலமாக மாறிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால்தான் பெரிய வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதாலேயே இந்த தேசிய அளவிலான கூட்டணி உருவாக்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இறுதியாக,“எங்கள் கூட்டணித் தலைவர்கள் எறும்புகள் போலவும், தேனீக்கள் போலவும் உழைத்து, 5 ஆண்டுகால அவல ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவார்கள்” என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Where will the anti DMK votes go Who will perform the surgery AIADMK at high speed Vijay at turtle speed


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->