‘வி தி லீடர்ஸ்’ இயக்கம் எப்போது கட்சியாக மாறும்? சைலண்டாய் அண்ணாமலை போட்ட ப்ளான்! வெல்லுமா வி தி லீடர்ஸ்?
When will the We the Leaders movement transform into a political party Annamalai quiet plan will We the Leaders succeed
பாஜகவில் இருந்து விலகிய பிறகு அமைதியாக இருந்து வந்த முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தற்போது தனது புதிய அரசியல் பயணத்தை படிப்படியாக முன்னெடுத்து வருகிறார். அவர் தொடங்கியுள்ள ‘வி தி லீடர்ஸ்’ (We The Leaders) என்ற இயக்கத்தில் சில வாரங்களிலேயே லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது அடுத்த அரசியல் நகர்வு குறித்து தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை, புதிய கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், முதற்கட்டமாக ‘வி தி லீடர்ஸ்’ என்ற சமூக-அரசியல் இயக்கத்தை அறிவித்தார். அப்போது, பாஜகவில் இருந்த கால அனுபவங்கள், கருத்து வேறுபாடுகள் மற்றும் தனது எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியிருந்தார்.
இந்நிலையில், இந்த இயக்கத்தின் இணையதளம் வாயிலாக 18 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துவரும் நிலையில், இது அண்ணாமலையின் தனிப்பட்ட ஆதரவு வட்டத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக இளைஞர்கள், முதல் முறையாக அரசியலில் ஆர்வம் காட்டுபவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை மையப்படுத்தி இந்த இயக்கம் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் சமூக வலைதள நேரலையில் தோன்றிய அண்ணாமலை, தனது சொந்த ஊரிலிருந்து மக்களிடம் உரையாற்றினார். விவசாய நிலம், குடும்ப வாழ்க்கை, சிறுவயது நினைவுகள் உள்ளிட்டவற்றைப் பகிர்ந்துகொண்ட அவர், தனது அரசியல் வேர்கள் கிராமப்புற மக்களுடனும் சாதாரண மக்களின் வாழ்க்கையுடனும் இணைந்திருப்பதை வலியுறுத்த முயன்றதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மேலும், 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என்று அண்ணாமலை கூறியிருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. “அடுத்தகட்ட நடவடிக்கை” என்ற அவரது வார்த்தை, ‘வி தி லீடர்ஸ்’ இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாறுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அண்ணாமலை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்றாலும், அவரது சமீபத்திய பேச்சுகள் மற்றும் அமைப்பின் நடவடிக்கைகள் அரசியல் கட்சிக்கான அடித்தளப் பணிகளாகவே பார்க்கப்படுகின்றன.
அதேபோல், உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசிய அண்ணாமலை, “பலரும் களத்தில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ‘வி தி லீடர்ஸ்’ சார்பில் வேட்பாளர்கள் களமிறங்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அண்ணாமலையின் ஆதரவாளர்களின் கருத்துப்படி, நேரடியாக சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் குதிப்பதை விட, முதலில் உள்ளாட்சி அமைப்புகளில் வலுவான அடித்தளத்தை உருவாக்குவது நீண்டகால அரசியல் வளர்ச்சிக்கு உதவும். அந்த வியூகத்தையே அண்ணாமலை பின்பற்றலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
திமுக, தவெக, அதிமுக என தமிழகத்தின் மூன்று முக்கிய அரசியல் சக்திகளுக்கு மத்தியில் தனக்கென ஒரு அரசியல் இடத்தை உருவாக்கும் முயற்சியாக ‘வி தி லீடர்ஸ்’ பார்க்கப்படுகிறது. இருப்பினும், உறுப்பினர் சேர்க்கை எண்ணிக்கை அரசியல் வெற்றியாக மாறுமா, அந்த ஆதரவு வாக்குகளாக மாறுமா, உள்ளாட்சித் தேர்தலில் அண்ணாமலை எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது அடுத்தகட்ட அரசியல் நிகழ்வுகளே தீர்மானிக்கப் போகின்றன.
English Summary
When will the We the Leaders movement transform into a political party Annamalai quiet plan will We the Leaders succeed