காங்கிரஸ் கூட்டணி கைகூடாததால் அதிருப்தியில் விஜய்? விஜயிடம் ராகுல் சொன்ன விஷயம்! புதியவியூகத்தை தொடங்கிய தவெக!
Vijay unhappy with Congress alliance not working What Rahul told Vijay Tvk has started a new strategy
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் கூட்டணி அரசியல் குறித்து தீவிரமாக யோசித்து வருகிறார். குறிப்பாக காங்கிரஸ் கட்சியை தங்களது கூட்டணியில் இணைக்க வேண்டும் என்பதே விஜய்யின் முக்கிய திட்டமாக இருந்ததாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி தவெக உடன் இணைய வாய்ப்பு இருப்பதாக விஜய்க்கு நெருங்கிய நிர்வாகிகள் நம்பிக்கை அளித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் அதிருப்தியில் இருப்பதாகவும், தவெக தரப்பில் மரியாதையான தொகுதிகள் வழங்கப்பட்டால் காங்கிரஸ் விஜய் பக்கம் வரலாம் என்றும் அவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்த நம்பிக்கையிலேயே விஜய் தனது கட்சியின் சில முக்கிய நிர்வாகிகளிடம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பை ஒப்படைத்திருந்தார். ஆனால் மார்ச் 4ஆம் தேதி திமுக மற்றும் காங்கிரஸ் இடையே 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானதும், விஜய்யின் கூட்டணி எதிர்பார்ப்பு முற்றிலும் முறிந்தது.
இதனால் விஜய் கடும் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது. காங்கிரசை நம்பி காலத்தை வீணாக்கிவிட்டோமா என்ற கவலையும் அவரது தரப்பில் எழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் தலைமைக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து விஜய்க்கு சில தகவல்கள் சென்றதாக கூறப்படுகிறது. அதன்படி, திமுக–காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியதில் ராகுல் காந்தியின் நேரடி பங்கு இல்லை என கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி மற்றும் கூடுதல் தொகுதிகள் போன்ற கோரிக்கைகளை திமுக ஏற்றால் மட்டுமே கூட்டணி தொடர வேண்டும் என்ற கருத்தில் ராகுல் காந்தி இருந்ததாகவும், இல்லையெனில் திமுகவுடன் கூட்டணியை முறித்து விஜய் தலைமையிலான தவெக உடன் இணையலாம் என்ற எண்ணமும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் திமுக தலைமையினர் காங்கிரஸ் கூட்டணியை தக்க வைத்துக்கொள்ள தீவிர முயற்சி எடுத்ததால், இறுதியில் ராகுல் காந்தியின் விருப்பத்திற்கு மாறாகவே ஒப்பந்தம் நடந்ததாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தமிழ்நாட்டில் கூட்டணி அமையாத சூழலில் புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களில் தவெக உடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசலாம் என ராகுல் காந்தி தரப்பில் இருந்து சைகை வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் தமிழகத்தில் திமுக–காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் நிலையில், புதுச்சேரியில் மட்டும் கூட்டணியை முறிப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை என விஜய் தரப்பு பதிலளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இனி காங்கிரஸை காத்திருக்க முடியாது என்ற நிலைப்பாட்டை விஜய் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தமிழகத்தில் புதிய அரசியல் சமன்பாடுகளை உருவாக்கும் முயற்சியாக விஜய்யை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க பாஜக தலைமை தீவிரமாக முயற்சி செய்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.
இதனால் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு விஜய் எந்த அரசியல் பாதையைத் தேர்வு செய்கிறார் என்பது அரசியல் களத்தில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
Vijay unhappy with Congress alliance not working What Rahul told Vijay Tvk has started a new strategy