பரந்தூர் திட்டத்தை கைவிட்ட விஜய் அரசு... 'தமிழக வளர்ச்சியை பின்னோக்கி இழுக்கும் முடிவு'என பாஜக சாடல்...! - Seithipunal
Seithipunal


பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு மாற்றாக வேறு இடத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான இடம் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய இடத்தை தேர்வு செய்வது, அதற்கான ஆய்வுகளை மேற்கொள்வது, நிலம் கையகப்படுத்துவது மற்றும் மத்திய அரசிடம் தேவையான அனுமதிகளை பெறுவது என ஒவ்வொரு கட்டத்திற்கும் நீண்ட காலம் தேவைப்படும். இதனால் புதிய விமான நிலையத் திட்டம் மேலும் தாமதமடைவதுடன், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பின்னடைவு ஏற்படக்கூடும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில், தவெக அரசின் முடிவுக்கு பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில், பரந்தூர் விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை இறுதி செய்யாமல் திட்டத்தை கைவிடுவதாக சட்டப்பேரவையில் அறிவித்திருப்பது தமிழகத்தின் வளர்ச்சியை பின்னோக்கி நகர்த்தும் முடிவு என விமர்சித்துள்ளார்.

புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக இதுவரை மத்திய அரசிடம் முறையான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதா என்றும், எந்த இடத்தில் புதிய விமான நிலையம் அமைய உள்ளது என்பது குறித்து தெளிவான முடிவு இல்லாத நிலையில், இவ்வளவு அவசரமாக திட்டத்தை கைவிட வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே பரந்தூர் விமான நிலையத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பயணிகள் போக்குவரத்து, நிலத்தின் தன்மை, எதிர்கால தேவை, போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவை மீண்டும் ஆரம்ப கட்டத்திலிருந்து தொடங்குவது கால விரயம், நிதி விரயம் மற்றும் அரசு வளங்களின் விரயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தின் நீண்டகால வளர்ச்சித் திட்டத்தை தாமதப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பரந்தூர் விமான நிலையத்திற்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுமார் 1,700 ஏக்கர் நிலங்களின் நிலை என்னவாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விமான நிலையத் திட்டத்திற்காக நிலங்களை அரசிடம் ஒப்படைத்த மக்களுக்கு அரசு என்ன பதில் அளிக்கப் போகிறது என்பதையும் அவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

இறுதியாக, தவெக அரசுக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதில்தான் பிரச்சினையா அல்லது தமிழகத்திற்கு புதிய விமான நிலையம் அமைவதிலேயே பிரச்சினையா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பான அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன, மாற்று இடம் எங்கு தேர்வு செய்யப்பட உள்ளது, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கைகளின் நிலை என்ன என்பவை குறித்து அரசின் விளக்கம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay government abandons Paranthur project BJP slams decision that will pull back Tamil Nadu development


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->