அமெரிக்கா வரி விதிப்பால் இந்தியாவில் பல கட்ட அபாயம் நிலவும்...! துரை வைகோ
US tariffs pose multiple risks India Durai Vaiko
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக தென் மண்டல மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், துணை பொது செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.இதில், முதன்மைச் செயலாளர் 'துரை வைகோ' பங்கேற்று உரையாடினார். அங்கு பத்திரிக்கையாளர்களுக்கு அவர் தெரிவித்ததாவது,"பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் எனத் தெரிவித்து சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசிடம் கேட்டோம். தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தான் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அங்கு பேரணி நடந்து வருகிறது.
தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் கணிசமானவற்றை நிறைவேற்றியுள்ளனர்.பல வாக்குறுதிகள் நிறைவேறாமல் இருப்பதற்கு நிதி நெருக்கடியும் ஒரு காரணம். இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு அமெரிக்க நாடு 50 % வரிவிதிப்பால் மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு பொறுத்த வரை ஜவுளித்துறை முக்கிய தொழிலாக உள்ளது.அமெரிக்காவின் வரி விதிப்பால் ஆயிரக் கணக்கான தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலை உருவாகியுள்ளது.இதனால் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் தங்களது வேலை இழக்கும் நிலை வரும். மத்திய அரசு இதற்குரிய மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
ஏற்கனவே மத்திய அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிகிறது. 200 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. இதில் 40 நாடுகளை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து த.வெ.க. தலைவர் விஜய் பேசியதை தவிர்க்க வேண்டும். பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் மதிமுக சார்பில் மாநாடு நடைபெற இருக்கிறது" என்று தெரிவித்துவிட்டு அவர் உரையை முடித்துக்கொண்டார்.
English Summary
US tariffs pose multiple risks India Durai Vaiko