அரை இன்ச் கூட நகரமுடியல..பாஜக 40 சீட்..தேமுதிக அதிருப்தி…கூட்டணியை நகர்த்த முடியாமல் தவிக்கும் எடப்பாடி பழனிசாமி
Unable to move even half an inch BJP 40 seats DMDK dissatisfied Edappadi Palaniswami struggling to move the alliance
எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு தொடர்பான கருத்து வேறுபாடுகள் தீவிரமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக தரப்பு இந்தத் தேர்தலில் குறைந்தபட்சம் 40 சட்டமன்றத் தொகுதிகள் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதற்கு பதிலாக அதிமுக தரப்பு அதிகபட்சமாக 30 இடங்களை மட்டுமே வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடு விவகாரங்களில் தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக, சமீப காலமாக அதிமுக – பாஜக கூட்டணியைச் சுற்றி தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்ட நிலையில், திடீரென மீண்டும் கூட்டணி அமைப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதுவரை பாஜகவை கடுமையாக விமர்சித்துவந்த அதிமுக, கூட்டணி அறிவிப்புக்குப் பிறகு திடீரென பாஜகவுடன் இணைந்து செயல்படத் தொடங்கியது. ஆனால், இந்த கூட்டணியில் இன்னும் பல நிச்சயமின்மைகள் உள்ளன என்ற உணர்வு அதிமுக தொண்டர்கள் மற்றும் சில தலைவர்களிடையே நிலவுகிறது. குறிப்பாக, “தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும்” என்று அமித் ஷா தொடர்ந்து கூறி வருவதும், ஆனால் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அவர் வெளிப்படையாக அறிவிக்காததும், அதிமுக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், கடந்த டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில், 2026 சட்டமன்றத் தேர்தலில் அமைக்கப்படும் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும் என்றும், தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் பாஜக கூட தமிழ்நாட்டில் அதிமுக தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தப்பட்டது. மேலும், திமுக ஆட்சியை அகற்றுவதே இந்தக் கூட்டணியின் பிரதான இலக்கு என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.
அதே தீர்மானத்தில், கூட்டணியில் சேரும் அனைத்து கட்சிகளும் அதிமுக தலைமையை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என்றும், எந்தக் கட்சி சேர வேண்டும், யாருக்கு எத்தனை இடங்கள் வழங்க வேண்டும் என்பதனை முழுமையாக எடப்பாடி பழனிசாமிதான் தீர்மானிப்பார் என்றும் குறிப்பிடப்பட்டது. இதன் மூலம், கூட்டணி தொடர்பான முழு அதிகாரமும் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது.
ஆனால், பொதுக்குழு முடிந்த பிறகும் எடப்பாடி பழனிசாமி நினைத்தபடி நிகழ்வுகள் நகரவில்லை என்பதே அதிமுக வட்டாரங்களின் கருத்தாக உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கூட்டணியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டாலும், அவர்கள் தமிழக வெற்றிக் கழக (தவெக) பக்கம் நகரத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல், பாஜக அதிக தொகுதிகள் கோருவதும், தேமுதிக ஆறு சீட்டுகள் என்ற தகவலைக் கேட்டு கடும் கோபத்தில் இருப்பதும் கூட்டணிக்குள் புதிய சிக்கல்களை உருவாக்கியுள்ளது.
பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, தங்களுக்கு மரியாதையான எண்ணிக்கையிலான தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கும் நிலையில், அதற்கு பாஜக மற்றும் அதிமுக தரப்பில் தெளிவான பதில் கிடைக்காதது அதிருப்தியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு, கூட்டணியை பலப்படுத்த எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சிகள் பலவும் இதுவரை பலனளிக்காததால், அடுத்த கட்ட முடிவுகளை எடுக்க முடியாமல் அவர் குழப்பத்திலும் அதிருப்தியிலும் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Unable to move even half an inch BJP 40 seats DMDK dissatisfied Edappadi Palaniswami struggling to move the alliance