'நான் சனிக்கிழமை மட்டும் தலைவன் இல்லை': விஜய்யை சீண்டிய உதயநிதி..!
Udhayanidhi scolds Vijay for coming out on Saturday
'வாரத்தில் 05 நாட்கள் வெளியூரில் தான் இருக்கிறேன். மக்களை சந்திக்கிறேன். ஆனால், சனிக்கிழமை மட்டும் வெளியே வரும் நபர் நான் அல்ல' என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் நடிகர் விஜயை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தமிழகம் முழுக்க ஒரு கோடியே 20 லட்சம் மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்படுகிறது என்றும், செப்டம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டு ஆரம்பித்த திட்டம், இப்போது 2025 செப்டம்பர் மாதம் ஆகிவிட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு மகளிருக்கும் 24 ஆயிரம் ரூபாய் முதல்வர் கொடுத்துள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், 'நான் பல மாவட்டங்களில் மக்களை சந்திக்கிறேன். வாரத்தில் நான்கு, ஐந்து நாட்கள் வெளியில் சுற்றுகிறேன். நான் வெறும் சனிக்கிழமை மட்டுமே வெளியே வருபவன் நான் அல்ல. ஞாயிற்றுக்கிழமை கூட வெளியில் சுற்றிக் கொண்டு இருப்பேன். இன்றைக்கு என்ன கிழமை என்று கூட தெரியாது'என்று பேசியுள்ளார்.
மேலும், தான் பல மாவட்டங்களுக்கு போகும் போது மக்கள் கூட்டமாக நிற்பார்கள் என்றும், அவர்களுக்காக தான் வண்டியை நிறுத்தச் சொல்வதாகவும், அப்போது நிறைய பேர் மனுக்களோடு வருவார்கள், வாழ்த்துவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, அவர்கள், 'தம்பி.. அப்பாவிடம் சொல்லிவிடு. ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது, தேங்க்ஸ்' என்று கும்பல், கும்பலாக வந்து சொல்லிவிட்டு செல்வார்கள் என்று பேசியுள்ளார்.

அவர்களிடம் தான் 'ஆயிரம் ரூபாயை என்ன செய்வீர்கள்' என்று கேட்டால், அதில் 90 சதவீதம் பேர் மருத்துவச் செலவுக்கு பயன்படுகிறது, மாத்திரை வாங்குவதக்கவும், பேரன், பேத்தி கல்வி செலவுக்கு பயன்படுகிறது என்று சொல்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும், 'சிலர் வரவில்லை, எதனால் என்று சொல்ல மாட்டேன் என்கிறார்கள் என்று கூறுவார்கள். நிச்சயம் சொல்கிறேன், முதல்வர் சில விதிகளை தளர்த்திவிட்டார். இன்னும் இரண்டு மாதங்களில் கூடுதலாக தகுதி வாய்ந்த நிறைய மகளிருக்கு உரிமை தொகையை முதல்வர் கொடுப்பார்' என்று துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார்.
English Summary
Udhayanidhi scolds Vijay for coming out on Saturday