காவல் நிலையத்தில் ஒன்றரை மணி நேர விசாரணைக்கு பின் உதயநிதி விடுவிப்பு; மலர் மாலை, திமுக சால்வை அணிவித்து தொண்டர்கள் உற்சாகம்..!
Udhayanidhi released after one and a half hour interrogation at Thanjavur police station
முதல்வர் விஜய் குறித்து இரட்டை அர்த்த பேச்சு விவகாரத்தில் கைதான சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலினை, காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு போலீஸார் விடுவித்துள்ளனர்.
தஞ்சாவூரில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய உதயநிதி, இரட்டை அர்த்தத்தில், ஆபாசமாக பேசியதாக இன்று காலை தஞ்சாவூர் போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை - நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தஞ்சாவூருக்கு காவல் துறை வாகனம் மூலம் உதயநிதியை விசாரணைக்காக தஞ்சை அழைத்து சென்றனர். அப்போது வழிநெடுகிலும் திமுக தொண்டர்கள் திரண்டு வந்து காவல் துறை வாகனத்தை மறித்து ஆரர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

போலீஸார் அவர்களை அப்புறப்படுத்திய நிலையில், தமிழகம் முழுவதும் பல இடங்களில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று மாலை 06.45 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு உதயநிதி அழைத்து செல்லப்பட்டார். அங்கு விசாரணை நடைபெற்ற நிலையில் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
உதயநிதி அழைத்து செல்லப்பட்ட காவல் துறை வாகனத்தை பின்தொடர்ந்து அவரது சொந்த வாகனம் (கார்) சென்னையில் இருந்து சென்றது.

தற்போது விசாரணை நிறைவடைந்த பிறகு, அந்த காரில் அவர் புறப்பட்டுள்ளார். அப்போது காவல் நிலையத்துக்கு வெளியே திரண்டிருந்த திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்து, ஆரவாரம் செய்தனர். அதையடுத்து காரின் மேற்கூரையை திறந்து, அதில் நின்றபடி உதயநிதி பயணித்தார்.
அவரது வாகனம் தொண்டர்கள் புடைசூழ மெல்ல நகர்ந்தது வந்த போது அவருக்கு மலர் மாலை, திமுக சால்வை அணிவிக்கப்பட்டது.
நாளை சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. காவல் நிலைய விசாரணையை முடிந்த நிலையில், திருச்சி நோக்கி உதயநிதி புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Udhayanidhi released after one and a half hour interrogation at Thanjavur police station