விஜய் முதல்வராகக் கூடாது என்பதற்காக உதயநிதி செயல்பட்டார்! திமுக - அதிமுக கூட்டணி? போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா
Udhayanidhi acted to prevent Vijay from becoming the CM DMK AIADMK alliance Adhav Arjuna breaks it up
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். “பதவி வெறி காரணமாக விஜய் முதல்வராகுவதை தடுக்க முயன்றவர் உதயநிதி” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வில்லிவாக்கத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா, சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துகளுக்கு பதிலடி கொடுத்தார்.
அவர் பேசியதாவது:“65 சதவீத மக்கள் தவெகவுக்கு வாக்களிக்கவில்லை என்று உதயநிதி சட்டசபையில் பேசுகிறார். அப்படியானால் 2006-ல் கலைஞர் கருணாநிதி வெறும் 26 சதவீத வாக்குகளுடன் முதல்வரானதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்? 74 சதவீத மக்கள் ஓட்டு போடவில்லை என்று சொல்ல முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “நீங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் 30 கோடி ரூபாய் வரை செலவு செய்து தேர்தலை சந்தித்தீர்கள். ஆனால் எங்கள் வேட்பாளர்கள் சாதாரண இளைஞர்கள். 10 லட்சம் ரூபாய் கூட செலவு செய்யாமல் வெற்றி பெற்றவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் ரோட்டில் இருந்து வந்தவர்கள். குடும்ப அரசியலில் இருந்து வரவில்லை” என்றார்.
அதிமுக – திமுக இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார். “விஜய் முதல்வராகக் கூடாது என்பதற்காக உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உதயநிதியும், எடப்பாடி பழனிசாமியின் மகனும் இணைந்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வந்தன” என்று கூறினார்.
அதேபோல், “காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஆதரவு அளிக்கவில்லை என்றால் பாஜக ஆட்சி அமைந்திருக்கும் என்று கம்யூனிஸ்ட் தலைவர் பேபி கூறியிருந்தார். அதுவே அந்த நேரத்தில் என்ன அரசியல் நடந்தது என்பதற்கு சாட்சி” என்றும் தெரிவித்தார்.
“விஜய் முதல்வராக வரக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக திமுக பல அரசியல் நகர்வுகளை செய்தது. ஆனால் மக்கள் முடிவு வேறுபட்டது. சாதாரண மக்களின் ஆதரவுடன் தான் இன்று தவெக அரசு உருவாகியுள்ளது” என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
இந்த பேச்சு தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
English Summary
Udhayanidhi acted to prevent Vijay from becoming the CM DMK AIADMK alliance Adhav Arjuna breaks it up