காங்கிரஸுடன் 70 சீட்டுக்கு டீல் முடித்த தவெக? தவெகவுக்கு பாஜக ‘ரெட் சிக்னல்’? இனி காங்கிரஸ் வேண்டாம்..முடிவை மாற்றிய விஜய்!
Tvk made a deal with Congress for 70 seats BJP red signal to Tvk No more Congress Vijay changes his mind
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசியல் நகர்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைக்கக் கூடாது என பாஜக தரப்பில் இருந்து நேரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, தவெக தனித்து போட்டியிடும் முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தமிழகத்தில் 16-ஆவது சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், ஏப்ரல் மாதத்தில் 17-ஆவது சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது.
“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற முழக்கத்துடன் அரசியல் களம் நகரும் இந்தச் சூழலில், தவெக தலைவர் விஜய் “ஆட்சியில் பங்கு” என்ற புதிய கோஷத்தை முன்வைத்தார். 1952 முதல் தமிழகத்தில் நடந்த எந்தத் தேர்தலிலும் “ஆட்சியில் பங்கு” என்ற கோரிக்கை முன்வைக்கப்படாத நிலையில், விஜய்யின் இந்த அறிவிப்பு தேசிய அரசியலிலும் கவனத்தை ஈர்த்தது.
இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சி தீவிரமாக பரிசீலித்ததாக கூறப்படுகிறது. **ராகுல் காந்தி**க்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி மூலம் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதில் காங்கிரஸுக்கு 70 சட்டசபை தொகுதிகள், துணை முதல்வர் பதவி, 6 அமைச்சர் பதவிகள் மற்றும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் 28 தொகுதிகள் என தவெக தரப்பில் இருந்து வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆஃபர், நீண்ட காலமாக திமுக கூட்டணியில் இருந்தும் “ஆட்சியில் பங்கு” கிடைக்காத காங்கிரஸ் தலைமைக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில், திமுகவிடம் 41 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவீத இடங்கள் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தத் தொடங்கியதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், திமுக தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்படாததால், கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் – தவெக இடையிலான ரகசிய பேச்சுவார்த்தை குறித்து டெல்லி பாஜக தலைமைக்கு தகவல் சென்றதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, விஜய்யின் அரசியல் ஆலோசகர் விஷ்ணு ரெட்டி டெல்லி சென்று பாஜக தலைமையுடன் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது “எங்களுடன் கூட்டணிக்கு வருங்கள், அல்லது தனித்து போட்டியிடுங்கள்; ஆனால் காங்கிரஸுடன் கூட்டணி வேண்டாம்” என பாஜக தரப்பில் இருந்து தெளிவான உத்தரவு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் சந்தித்து வரும் சென்சார் சிக்கல்களை தீர்க்க உதவுவதாகவும் பாஜக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, தவெக தனித்து களமிறங்கும் முடிவை எடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு போதிய வாக்கு சதவீதம் இல்லை என விமர்சித்து வரும் நிலையில், “தனித்து போட்டியிட்டு தங்களது உண்மையான அரசியல் பலத்தை நிரூபிப்பதே சரியான பாதை” என்ற எண்ணத்தில் விஜய் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த முடிவு தமிழக தேர்தல் அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
English Summary
Tvk made a deal with Congress for 70 seats BJP red signal to Tvk No more Congress Vijay changes his mind