மதுரை மேயர் பதவிக்கு தவெக – காங்கிரஸ் போட்டி! காய் நகர்த்தும் மாணிக்கம் தாகூர்! பிடிவாதம் காட்டும் சிடிஆர் நிர்மல்குமார்!
TVK and Congress vie for the Madurai Mayor post Manickam Tagore makes his moves CTR Nirmal Kumar remains adamant
மதுரை மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றுவதில் தவெக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே போட்டி உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் அரசியல் கட்சிகள் மத்தியில் தீவிரமடைந்து வரும் நிலையில், முக்கிய மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை கைப்பற்றுவதற்கான கணக்குகளும் தற்போது தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தவெக தரப்பில் மதுரை மேயர் பதவிக்கு திருப்பரங்குன்றம் தொகுதி மாவட்டச் செயலாளர் மருது பாண்டியனை முன்னிறுத்த அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. திருப்பரங்குன்றம் தொகுதியை தனக்காக விட்டுக்கொடுத்த நிலையில், அதற்கு பிரதிபலனாக மருது பாண்டியனுக்கு முக்கியமான பொறுப்பை வழங்க வேண்டும் என்ற எண்ணம் சிடிஆர் நிர்மல்குமார் தரப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, தவெக தலைமை உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை வேகப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வார்டுகளின் நிலவரத்தை ஆய்வு செய்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
மேயர் பதவிகளுக்கான சாத்தியமான வேட்பாளர்களையும் தவெக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏற்கனவே அடையாளம் காணத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், தவெக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளும் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதனால் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை வார்டுகள் ஒதுக்கப்படும், தவெகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும், முக்கிய மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் எந்தக் கட்சிக்கு வழங்கப்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர் பதவி மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த முறை 3 முதல் 5 மாநகராட்சி மேயர் பதவிகளை கேட்க அக்கட்சி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக காரைக்குடி, மதுரை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை காங்கிரஸ் கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் மதுரை மாநகராட்சி மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க வேண்டும் என்பதில் அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்கம் தாகூர் தரப்பு தீவிரமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் செல்வாக்கை மேலும் அதிகரிக்க மேயர் பதவி முக்கியமானதாக இருக்கும் என்று அந்தத் தரப்பு கருதுவதாக கூறப்படுகிறது.
மறுபுறம், தவெக தரப்பில் சிடிஆர் நிர்மல்குமார் மருது பாண்டியனை முன்னிறுத்தி வருவது இந்தப் போட்டியை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. ஒருபுறம் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகள், மறுபுறம் தவெக நிர்வாகிகளின் உள்ளூர் அரசியல் கணக்குகள் என மதுரை மேயர் பதவிக்கான போட்டி இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
மேலும், மதுரையைச் சேர்ந்த விஸ்வநாதனுக்கு ஏற்கனவே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், மேயர் பதவியும் காங்கிரஸ் வசம் கிடைத்தால் அந்தக் கட்சியின் அமைப்பு மற்றும் அரசியல் செல்வாக்கை மதுரையில் மேலும் வலுப்படுத்த முடியும் என்று மாணிக்கம் தாகூர் தரப்பு கருதுவதாக கூறப்படுகிறது.
இதனால் மதுரை மேயர் பதவி தவெகவுக்கா, காங்கிரஸுக்கா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி மற்றும் பதவிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் மதுரை மாநகராட்சி முக்கிய விவாதப் பொருளாக மாறும் சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
TVK and Congress vie for the Madurai Mayor post Manickam Tagore makes his moves CTR Nirmal Kumar remains adamant