அதிமுகவுக்கு இளம் முகம் தேவை! பிரபல நடிகரை கட்சிக்குள் இழுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமா? – பின்னணியில் நடக்கும் முக்கிய ஆலோசனை!
AIADMK needs a young face Is Edappadi Palaniswami planning to bring a popular actor into the party Key consultations underway behind the scenes
அடுத்த லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் ஜென் ஸி தலைமுறையைச் சேர்ந்த வாக்காளர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்பதால், அதற்கான அரசியல் வியூகத்தை அதிமுக இப்போதே வகுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சிலர் தொடர்ந்து ஆலோசனை வழங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி தவெக ஆட்சியை கைப்பற்றியுள்ளதாக கூறப்படும் நிலையில், அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்றிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் விவாதம் நிலவுகிறது. கடந்த தேர்தலில் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் அதிமுகவுக்கு ஆதரவளித்திருந்தாலும், அடுத்த தேர்தலுக்குள் கட்சியை மீண்டும் வலுப்படுத்தாவிட்டால் சிக்கல் மேலும் தீவிரமடையக்கூடும் என சீனியர்கள் எச்சரிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, கட்சியில் இருந்து விலகிச் செல்பவர்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி பெரிதாக கவலைப்படவில்லை என்ற தோற்றம் இருப்பதாகவும் பேசப்படுகிறது. குறிப்பாக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் இதுவரை சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், அதிமுகவைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக பக்கம் சென்றுவிட்டதாகவும், மேலும் சுமார் 10 எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. இதேபோல் செங்கோட்டையன் தரப்பில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு செல்லலாம் என்ற தகவலும் அரசியல் விவாதத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து தெளிவான நிலை இல்லாதபோதிலும், அதிமுகவில் எதிர்கால அரசியல் வியூகம் குறித்து ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒருபுறம் கட்சியின் தற்போதைய அமைப்பை பாதுகாப்பது குறித்தும், மறுபுறம் 2029 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பாஜகவுடனான கூட்டணியை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டால், அடுத்த தேர்தலில் அதிமுக மீண்டும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கணக்கு போடுவதாக கூறப்படுகிறது.
ஆனால், தேர்தல் களத்தின் மாறிவரும் தன்மை குறித்து அதிமுக சீனியர்கள் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் ஆதரவு தவெக அரசியல் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியதாக கருதப்படும் நிலையில், அந்த வாக்கு வங்கியை மீண்டும் அதிமுக பக்கம் கொண்டு வர புதிய தலைமுறை முகங்கள் அவசியம் என அவர்கள் சுட்டிக்காட்டி வருவதாக கூறப்படுகிறது.
திமுகவில் உதயநிதி ஸ்டாலின் இருப்பதைப் போல, அதிமுகவுக்கும் இளைஞர்களை கவரக்கூடிய ஒரு புதிய முகம் தேவை என்றும் சில நிர்வாகிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிகிறது. இதனை எடப்பாடி பழனிசாமியும் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக, மக்கள் மத்தியில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் கவர்ச்சிகரமான நடிகர் ஒருவரை அதிமுகவுக்குள் கொண்டு வந்தால், கட்சிக்கு புதிய அரசியல் தோற்றத்தை உருவாக்க முடியும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சில நடிகர்களை அணுகுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், உறவுமுறை மற்றும் தனிப்பட்ட தொடர்புகள் மூலமாக நடிகர்களிடம் பேசுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்களில் முனுமுனுப்பு எழுந்துள்ளது.
இதனால், அதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் வியூகம் வெறும் கூட்டணி கணக்குகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்குமா அல்லது இளம் தலைமுறையை கவரும் வகையில் கட்சிக்குள் புதிய பிரபல முகங்களை கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக நடிகர் ஒருவரை அதிமுகவுக்குள் கொண்டு வரும் முயற்சி உண்மையில் தொடங்கியுள்ளதா என்பது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
AIADMK needs a young face Is Edappadi Palaniswami planning to bring a popular actor into the party Key consultations underway behind the scenes