காங்கிரஸில் மீண்டும் ஜி.கே.வாசன்? “ராகுலிடம் பேசுங்கள்” – மாணிக்கம் தாகூரிடம் சொன்ன வாசன்.. பின்னணியில் நடக்கும் முக்கிய பேச்சுவார்த்தை! - Seithipunal
Seithipunal


தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், கட்சியின் வளர்ச்சிக்காக சில அதிரடியான அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு மேலிடத்தின் நம்பிக்கையைப் பெற முயற்சித்து வருவதாக காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக தவெக தலைவர் விஜய்யை இந்தியா கூட்டணிக்குள் கொண்டு வருவதிலும், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதை விஜய் தரப்பில் வலியுறுத்த வைப்பதிலும் ஏற்பட்டதாக கூறப்படும் பின்னடைவு காரணமாக, மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி மீது காங்கிரஸ் மேலிடத்தில் அதிருப்தி இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் முக்கியமான அரசியல் நகர்வை மேற்கொள்ள வேண்டும் என மாணிக்கம் தாகூரைச் சுற்றியுள்ள நிர்வாகிகள் ஆலோசனை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், காங்கிரஸில் இருந்து பிரிந்து தனிக்கட்சி நடத்தி வரும் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸை மீண்டும் காங்கிரஸுடன் இணைப்பது குறித்து மாணிக்கம் தாகூர் தரப்பில் முயற்சிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு சமீபத்திய சந்திப்பும் முக்கியமான தொடக்கமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 31-ம் தேதி ஜி.கே.வாசனின் தந்தையும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான மூப்பனாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மூப்பனார் நினைவிடத்துக்கு சென்று ஜி.கே.வாசனுடன் இணைந்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது மாணிக்கம் தாகூரும் ஜி.கே.வாசனும் நீண்ட நேரம் அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. அந்தப் பேச்சு அத்துடன் முடிவடையாமல், இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே தனிக்கட்சி நடத்துவதன் மூலம் எதிர்பார்த்த அளவுக்கு அரசியல் பலனை பெறுவது கடினம் என்ற கருத்து ஜி.கே.வாசன் தரப்பில் இருப்பதாகவும், தமாகாவின் மூத்த நிர்வாகிகள் சிலர் மீண்டும் காங்கிரஸுடன் இணைவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில்தான் மாணிக்கம் தாகூர் மற்றும் ஜி.கே.வாசன் இடையே மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“காங்கிரஸில் மீண்டும் இணைந்து விடுங்களேன்” என்று மாணிக்கம் தாகூர் தரப்பில் வலியுறுத்தப்பட்டபோது, “நானும் அதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று ஜி.கே.வாசன் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக தமாகா மூத்த நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து, “மேலிடத்தில் நான் பேசுகிறேன்” என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்ததாகவும், அதற்கு ஜி.கே.வாசன், “ராகுல்ஜியிடம் பேசுங்கள். அவருக்கு ஓகேவா என்பதை முதலில் எனக்கு தெரிய வேண்டும்” என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு மாணிக்கம் தாகூர், ஜி.கே.வாசன் மீது ஆரம்பகாலத்தில் ராகுல் காந்திக்கு கோபமும் வருத்தமும் இருந்தது உண்மை என்றாலும், தற்போது அந்த நிலை இல்லை என்று கூறியதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தை ராகுல் காந்தி தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில், மீண்டும் காங்கிரஸில் இணையும் போது முன்பு போல எந்தவித நிபந்தனைகளையும் விதிக்கக்கூடாது என்றும் மாணிக்கம் தாகூர் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியை எதிர்பார்க்கக்கூடாது என்றும், தாம் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டு இரண்டு மாதங்களே ஆன நிலையில், தன்னை உடனடியாக மாற்றும் முடிவை ராகுல் காந்தி விரும்பமாட்டார் என்றும் மாணிக்கம் தாகூர் கூறியதாக பேசப்படுகிறது.

எனவே, எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மீண்டும் காங்கிரஸில் இணைவது சாத்தியமான விஷயம்தான் என்றும் மாணிக்கம் தாகூர் விளக்கியதாக கூறப்படுகிறது.

இதற்கு ஜி.கே.வாசன் தரப்பில், “நீங்கள் சொல்வது புரிகிறது. ராகுல்ஜியிடம் பேசி, அவருடைய எண்ணம் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதன்பிறகு நாம் ஆலோசிப்போம்” என்று பதிலளித்ததாக தமாகா மூத்த நிர்வாகிகள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

இதனால், ஜி.கே.வாசன் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரங்களில் உருவாகியுள்ளது. ராகுல் காந்தியின் நிலைப்பாடு என்ன என்பது இந்தப் பேச்சுவார்த்தையின் அடுத்தகட்ட நகர்வுக்கு முக்கிய காரணியாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஒருவேளை இந்த முயற்சி வெற்றி பெற்றால், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அது குறிப்பிடத்தக்க அரசியல் நகர்வாக அமையும் என்பதால், மாணிக்கம் தாகூர் – ஜி.கே.வாசன் இடையேயான பேச்சுவார்த்தை அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

GK Vasan to return to the Congress Speak to Rahul Vasan tells Manickam Tagore crucial talks underway behind the scenes


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->